திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்த இடங்களில் பெரிய அளவில் மாறுதல் இருக்க வாய்ப்பில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- திமுக கூட்டணியில் காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கேட்கும் இடங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில், கூட்டணி தொடருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. என்னை பொருத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தான் நினைக்கிறேன். அதற்கு காரணம் காங்கிரசுக்கு தேசிய அரசியலுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. தவெக உடன் சென்றால் அவர்களுக்கு மக்களவை எம்.பிக்கள் யாரும் இல்லை. ராஜ்யசபாவிலும் காங்கிரசுக்கு ஆதரவு தேவைப் படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து விலகினால், காங்கிரசுக்கு தேசிய அளவில் நஷ்டம் ஏற்படும். அது ராகுல்காந்தி உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். தேசிய கட்சிகளை பொருத்தவரை, டெல்லிக்கு எது அணுகூலமோ, அந்த முடிவையே எடுக்கும். இந்த முறையும் அதுதான் நடக்கும். டெல்லிக்கு அணுகூலம் என்பது திமுக கூட்டணியில் தொடர்வதுதான். இது திமுகவுக்கும் நன்றாகவே தெரியும். காரணம் அவர்களும் டெல்லி பாலிடிக்சில் ஊறியவர்கள்தான்.

திமுக – காங்கிரஸ் உறவு என்பது சில நேரங்களில் இல்லாமல் இருந்துள்ளது. சில நேரங்களில் இருந்துள்ளது. ஆனால் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் தவெக – காங்கிரஸ் உறவு என்ன என்று யாருக்கும் தெரியாது. தவெக உடன் சேர்ந்தால் உடனடியாக என்ன லாபம் என்று தெரியாது. வாக்கு வங்கி குறித்தும் தெரியாது. விஜய் மீது சமீபத்தில் எழுந்துள்ள குடும்ப பிரச்சினைகள் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிற அச்சம் எல்லோரிடமும் இருக்கும். சமூக ஊடகங்களின் தாக்கம் காரணமாக தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும். தவெகவுக்கு உள்ள மற்றொரு மைனஸ் பாய்ண்ட் அவர்கள் சமூக வலைதளங்களிலேயே வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் பண்ண முடியாது. நீங்கள் கணினி அரசியலில் ஜெயிப்பீர்களா? அல்லது கள அரசியலில் ஜெயிப்பீர்களா? களத்தில் கட்டமைப்பு இருந்தால் தான் வாக்காளர்களை ஈர்க்க முடியும்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், எஸ்.ஐ.ஆர் பணிகள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பாக நடைபெற்றதாக சொல்கிறார். அப்படி என்றால் எஸ்.ஐ.ஆர் பணிகளில் திமுக முழுமையாக ஈடுபட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதிமுக எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடவில்லை. தவெக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது. அவர்களால் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. காங்கிரஸ் வழக்கம்போல் வேலையே பார்க்க மாட்டார்கள். திமுக தங்களுக்கு ஆதரவானவர்களுக்காக வேலையை பார்த்து எல்லா வாக்குகளையும் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. அதன் காரணமாக தான் திமுக குறையே சொல்லவில்லை. அப்படி இருந்தால் தலைமை தேர்தல் ஆணையர் உடனான ஆலோசனைக்கூட்டத்தில் திமுக தரப்பில் எவ்வளவு குறைகளை சொல்லி இருப்பார்கள்.
எந்தவித எதிர்ப்பும் திமுக தெரிவிக்காததால் அது அணுகூலமாக இருப்பதாக தான் அர்த்தம். அப்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமக்கு எவ்வளவு வாக்குகள் உள்ளது என்பது திமுகவுக்கு தெரியும். இப்படி அட்வாண்ட்டேஜ் திமுகவுக்கு இருக்கும்போது காங்கிரஸ் கட்சி எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், உதயசூரியன் எத்தனை இடங்களில் நிற்க வேண்டும் என்று முடிவு செய்ததை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

அதன்படி, உதயசூரியனாக நிற்க வேண்டிய இடம் குறைந்தபட்சம் 180 தொகுதிகளாகும். 19 கட்சிகள் கொண்ட கூட்டணியில் 6-7 கட்சிகள் உதயசூரியனில் போட்டியிடும். திமுக தனித்து 170 இடங்களில் உதயசூரியனில் போட்டியிடும். அப்போது மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்க 54 இடங்கள் தான் உள்ளன. இடதுசாரி கட்சிகளுக்கு கடந்த முறை 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், இம்முறை 4 தொகுதிகள் தான் வழங்க முடியும் என்று சொல்கிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர். அதில் காங்கிரசுக்கு 20 இடங்கள் வைத்துக் கொண்டால் கூட மற்ற கட்சிகளுக்கு எல்லாம் சேர்த்து 40 தொகுதிகள் வந்துவிடும். பிறகு எங்கே இடம் உள்ளது? எ
னவே காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்ததை விட பெரிய மாறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன். காங்கிரசுக்கு ராஜ்யசபாவில் இடம் தேவைப்படுகிறது. ஏற்கனவே தேமுதிகவுக்கு ஒரு இடம் கொடுப்பதாக கேள்விப்படுகிறோம். திமுகவுக்கு மொத்தம் 4 ராஜ்யசபா இடங்கள் உள்ளன. இதில் காங்கிரசுக்கும் ஒரு இடம் கொடுத்தால் 2 இடங்கள் தான் திமுகவுக்கு இருக்கும். அப்போது 2028ல் ராஜ்யசபா சீட் வழங்கினால் கூட காங்கிரசுக்கு முக்கியமானது தான். இவற்றை எல்லாம் கணக்கு போட்டு தான் காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு வரும்.

அப்போது தவெக என்கிற ஆப்ஷனை எப்படி கிரியேட் செய்கிறார்கள் என்றால், எங்களுக்கு இன்னொரு ஆப்ஷன் உள்ளது என்று காட்டிக்கொண்டே வருவது தான். ஆனால் நடைமுறையில் அந்த ஆப்ஷனை அவர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள். கீழ்மட்டத்தில் இருப்பவர்களை வைத்து பேச வைப்பார்கள். கே.சி.வேணுகோபால் பேசுவதே மேலே எடுபடுமா? என்று தெரியவில்லை. அவர் கேரளாவுக்கும் சேர்த்து கூட்டணி பேசுகிறார். காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை தேசிய தலைமையிடம் பேசிதான் தொகுதிகளை முடிவு செய்ய முடியும். அதனால் தற்போது எவ்வளவு இடங்கள் என்று தெரியாது.
இன்று விசிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதனால் மார்ச் 3,4,5 ஆகிய தேதிகளில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்று தெரியவரும். அதற்கு பிறகு என்ன என்ன தொகுதிகள் என்று பார்க்க வேண்டும். திமுக கூட்டணி என்பது இதே கன்டினியூவேஷன் தியரியில் தான் பார்க்கிறேன். இந்த குழப்பங்கள் தீர்ந்ததும் அதிமுக – பாஜக குழப்பம் தொடங்கும். திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போது அங்கு பிரதமர் செல்வது சரியானது அல்ல. அந்த தொகுதியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தொகுதியை விட்டுத்தருவாரா? சர்ச்சைக்குரிய இடங்களுக்கு பிரதமர் செல்லக்கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


