பாஜக சசிகலா – நடராஜனை வீழ்த்துகிற ஒரு கருவியாக தான் ஓபிஎஸ்-ஐ பயன்படுத்தியது. இதை புரிந்துகொண்டதால் தான் அவர் திமுகவில் இணைந்துள்ளார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததன் பின்னணி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ரவீந்திரன் துரைசாமி அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக தரப்பில் ஓபிஎஸ்க்கு 6 எம்.பி. இடங்கள் தர தயாராக இருந்தது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் ஓபிஎஸ் நின்றார். அந்த இடத்திலும் அவரை வெற்றிபெற செய்ய பாஜக தரப்பில் ஆதரவு வழங்கவில்லை. அவர் தன்னை நம்பி தான் களமாடினார்.அதேபோல் அதிமுகவை டெபாசிட் இழக்கச் செய்தார். மனோஜ்பாண்டியன் 30 சதவீதம் வாக்குகள் எடுத்த நெல்லையில், அதிமுகவை டெபாசிட் இழக்க செய்தார். அதிமுக இரட்டைத்தலைமையில் இருந்து ஒற்றைத் தலைமைக்கு மாறியதன் காரணமாக அதிமுகவின் 13 சதவீதம் வாக்குகளை பிரிந்துவிட்டது.
மற்றொன்று ஓபிஎஸ்க்கு பதிலாக நயினாரை சேர்த்தால் முக்குலத்தோரின் வாக்குகளை பெறலாம் என்று பாஜகவில் பெரிய லாபி நடைபெற்றது. அண்ணாமலையை தவிர அனைவரும் அந்த லாபியில் செயல்பட்டனர். ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டபோதும், பாஜகவில் நேரம் ஒதுக்காதது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது. மீண்டும் அதிமுகவுக்கு சென்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை அவர் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டும் என்பதால் தான் அவர் திமுகவில் இணைந்தார்.

ஓபிஎஸ், ஒருவேளை திமுகவில் இணையாமல் அரசியலை விட்டு ஒதுங்கினார் என்றால், அது அவருடைய அரசியல் எதிரியான எடப்பாடி பழனிசாமிக்கு தான் லாபமாகும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இயல்பாகவே 6 – 7 விழுக்காடு அதிமுகவினர் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டனர். கலைஞருக்கு இருந்த எதிர்ப்பு ஸ்டாலினுக்கு இருக்கவில்லை. அதுதான் இந்த இடத்தில் மிகவும் முக்கியமானதாகும். அதிமுக தொண்டர்களே ஸ்டாலினை ஏற்றுக்கொண்ட நிலையில், நாமும் ஏற்றுக்கொண்டால் எந்த தவறும் இல்லை என்று திமுகவில் இணையும் முடிவை எடுத்துள்ளார். ஸ்டாலினை பொருத்தவரை ஓபிஎஸ்-ஐ கட்சியில் சேர்த்ததில் எந்த சங்கடமும் இல்லை. அவர் கலைஞர், ஜெயலலிதா பாணி அரசியலை தவிர்த்து புதிய பாணி அரசியலை மேற்கொள்கிறார். மேலும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை ஆலோசித்த பின்னரே ஒபிஎஸ்-ஐ கட்சியில் சேர்த்துக் கொண்டார்.

ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததால், அவருடைய ஆதரவாளர்கள் அதிமுக, அமமுகவுக்கு போய்விடுவார்கள் என்று வாதம் வைக்கப்படுகிறது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக 13 சதவீதம் வாக்குகளை இழந்தது. அதற்கு காரணம் ஓபிஎஸ் உடைய தாக்கம் தான். ஓபிஎஸ் மீது முக்குலத்தோர் மக்களை தாண்டியும் மற்ற சமுதாயத்தை சேர்ந்த ஜெயலலிதா விசுவாசிகள ஓபிஎஸ்-ஐ ஆதரித்தார்கள். எனவே அவர்களுடைய வாக்குகள் திமுகவுக்கு பெருமளவு பயன்படும். சசிகலா, நடராஜனை எதிர்த்த தென் மாவட்டங்களை மற்றொரு சமுதாயத்தினர் ஒபிஎஸ் தலைமை ஏற்றபோது அவருக்கு 90 சதவீதம் ஆதரவை வழங்கினார்கள். முதலமைச்சர் நடைபயிற்சி சென்றபோது ஓபிஎஸ் சந்தித்து பேசியது தான் இதன் தொடக்கப் புள்ளியாகும். இருவருடைய நலன் விரும்பிகளும் இதில் பங்கு வகித்தனர்.
எடப்பாடி தலைமையிலான அதிமுகவை ஓபிஎஸ் கைப்பற்றுவது என்பது இனி சாத்தியமற்றது. சசிகலாவை அடிக்க பாஜகவினர் உதவினார்கள். ஆனால் எடப்பாடியை தாண்டி அதிமுக தலைமையை கைப்பற்ற அவருக்கு உதவ மாட்டார்கள். அதை ஓபிஎஸ் புரிந்துகொள்ள மறுவிட்டார். நடராஜன், சசிகலா போன்ற ராகுல்காந்திக்கு ஆதரவானவர்கள் ஆட்சிக்கு வந்தால் பாஜகவுக்கு அச்சுறுத்தல். எனவே தங்களுக்கு சாதகமான ஒரு நபரை கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்தனர்.

சசிகலா சொன்னதற்காக ஓபிஎஸ் பதவியை ராஜினாமா செய்ததால் மோடிக்கு அப்போதே கோபம் ஏற்பட்டுவிட்டது. அதனுடைய விளைவு தான் ஓபிஎஸ்க்கு பிரச்சாரத்திற்கு வராதது. வாரணாசியில் வேட்புமனு தாக்கலுக்கு அழைக்காதது ஆகும். நடராஜன் உத்தர பிரதேசத்தில் கன்சிராம் – முலாயம் சிங் அரசியலை செய்ததால் தான் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அந்த நுணுக்கமான அரசியல் காரணமாகவே சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மோடி எடுத்தார். இந்த அரசியலை எடப்பாடி பழனிசாமி நன்கு புரிந்துகொண்டார். அதன் காரணமாக தான் இன்று வரை மோடியுடன் பிரச்சினை இன்றி இருந்து வருகிறார். ஆனால் ஓபிஎஸ் புரிந்து கொள்ளாமல் தப்பாக விளையாடி விட்டார்.
கடைசி வரை ஓபிஎஸ்-ஐ நம்பவைத்து ஏமாற்றி வந்தார்கள். மோடியை சந்திக்க அனுமதி கிடைக்காதபோது தான், அவருடன் இருப்பவர்கள் நுணுக்கமான அரசியலை அருக்கு புரிய வைத்தனர். ஓபிஎஸ் என்டிஏவில் இணைய விரும்பவில்லை. அவர் அரசியலை விட்டு விலகும் முடிவைதான் எடுத்தார். ஆனால் என்னை போன்றவர்கள் அவர் அரசியலைவிட்டு விலகுவதால் எந்த பயனும் இல்லை என்னை போன்றவர்கள் எடுத்துக்கூறினோம்.

ஓபிஎஸ் அமித்ஷாவை மீறி திமுகவுக்கு செல்லும் முடிவை மாட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில், அதையும் மீறி சென்றுள்ளார். மோடியை பொருத்தவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் 10 இடங்களில் வெல்வதை தடுக்க வேண்டும். இடையில் இதற்கு உதவக்கூடிய ஸ்டாலினுக்கு முடிந்த அளவுக்கு நெருக்கடியை தர வேண்டும் என்பது தான் பாஜகவின் வியூகமாகும். ஸ்டாலின் தான் பாஜகவுக்கு எதிரி என்கிற வியூகம் கிடையாது. பாஜக ஓபிஎஸ்-ஐ அதிமுகவுக்குள் கொண்டுவருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதேநேரம் ஓபிஎஸ் தன்னுடைய அரசியல் நலன்களுக்காக திமுகவுக்கு சென்றுள்ளார். திமுகவில் இணையும் முன்பு அமித்ஷாவை ஒபிஸ் சந்தித்து பேசியபோது, எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டுவதற்காக நான் திமுகவுக்கு செல்கிறேன், பாஜகவை நான் எதிர்க்கவில்லை என்று விளக்கம் அளிப்பதற்காக தான் சென்றார்.
எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டி காரியங்களை சாதிப்பதாக திராவிட இயக்கத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள். கொள்கை ரீதியாக பாஜகவின் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு செல்கிறார் என்பதை தாண்டி, மெட்டீரியல் பாலிடிக்சில் என்ன செயதார்கள்? தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார்கள் என்று கூறிய நடராஜனை அடித்தார்கள். தற்போது விஜயை அடித்துள்ளார்கள். அதை தாண்டி வேறு யார் மீதும் பாஜக அடிக்கவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


