spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகேட்டதை கொடுத்தால்தான் கூட்டணி! காங்கிரசின் நோக்கம் இதுதான்! உடைத்துப் பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

கேட்டதை கொடுத்தால்தான் கூட்டணி! காங்கிரசின் நோக்கம் இதுதான்! உடைத்துப் பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

-

- Advertisement -

திமுகவிடம் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை வைத்து, கூட்டணியை முறித்துக்கொள்வது தான் காங்கிரசின் நோக்கமாக இருந்ததாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக, அதிமுக கூட்டணிகளில் நடைபெறும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக – பாஜக கூட்டணியில், தொகுதிகளை பிரித்துக்கொடுக்கும் இடத்தில் பாஜக தான் உள்ளது. திமுக கூட்டணியில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் அறிவாலயத்தில் தான் நடைபெறுகிறது. அதிமுகவிலும் ஜெயலலிதா காலம் வரை கட்சி அலுவலகத்தில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தற்போது அதிமுக கூட்டணியில், கூட்டங்களை கூட்டுவது எல்லாம் பாஜக தான். இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளை பார்க்கும் தமிழ்நாட்டில் அழுத்தமாக காலூன்ற பாஜக நினைப்பதால் அதிக இடங்களை கேட்க வாய்ப்புகள் உள்ளன. அதிமுக தரப்பில் எந்த அளவுக்கு இடங்களை கொடுப்பார் என்பது கேள்வி.

எடப்பாடி பழனிசாமி முன்பு முதலமைச்சராக இருந்தார். அதனால் அவர் சொன்ன தொகுதிகளை ஏற்றுக்கொண்டார்கள். இந்த முறை பாஜகவுக்கு அப்படியான கட்டாயம் கிடையாது. எடப்பாடி பழனிசாமிக்கும் பேர வலிமை குறைந்துவிட்டது. 180 முதல் 190 தொகுதிகள் வரை அதிமுக போட்டியிட்டால் தான் கூட்டணி வெற்றி பெற்றாலும், அதிமுக தனி பெரும்பான்மை பெற முடியும். 156 தொகுதிகளில் போட்டியிட்டு 118 தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினமானது. எனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வெளியேறும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களை கேட்பது தவறு இல்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது இடங்கள் குறைவாக இருந்தால் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் பேசினால் அது சரியாக இருந்திருக்கும். ஆனால் பேச்சுவார்த்தையே நடக்க விடாமல் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது போன்று மாணிக்கம் தாகூரின் பேச்சுகள் இருந்தன. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் திட்டம் போட்டு தாங்கள் கேட்கிற தொகுதியை கொடுங்கள். இல்லாவிட்டால் தங்களுக்கு வேறு கூட்டணி வாய்ப்பு உள்ளது என்கிற சூழலை உருவாக்க முயற்சித்தார்கள் என்பது உண்மை.

தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்து நிற்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் பேசுகிறபோதும்,  கூடுதல் இடங்கள் தராவிட்டால் வேறு கூட்டணிக்கு செல்வோம் என்பது சுயநலமாகும். அந்த சுயநலம் வெற்றி பெற்றுவிடும் என்கிற நம்பிக்கையை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ், தவெக உடன் கூட்டணி அமைத்தால், தமிழ்நாடு காங்கிரஸ் பிளவுபடவும் வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, தவெகவுக்கு செல்கிற விருப்பத்தை தள்ளிவைத்துவிட்டு கூட்டணிக்குள்ளே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அடுத்த சில மணி நேரங்களில் பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் தரப்பில் நாம் போகிற வரை போவோம் திமுக பணிந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் திமுக அப்படி பணியவில்லை. பாஜக எதிர்ப்பில் திமுக உறுதியாக இருந்தால் திமுக தான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எந்த அளவுக்கு விட்டுத்தர வேண்டும் என்று உள்ளது. அதற்கு மேல் விட்டுக்கொடுக்க முடியாது.

எனவே 25 இடங்களுக்கு மேலாக திமுகவால் விட்டுத்தர முடியாது. ஏற்கனவே கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்துள்ளன. அவர்களுக்கும் இடங்கள் தர வேண்டியுள்ளது. என்னுடைய கருத்துப்படி திமுக 180 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் தான் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க முடியும். அப்போது திமுக விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற வாதம் ஏற்புடையது அல்ல.

காங்கிரசுக்கு 35 தொகுதிகளை கொடுப்பதற்கு வாய்ப்புகள் கிடையாது. 26 அல்லது 27 இடங்கள் தரப்படலாம். தாங்கள் திமுக சொன்னதை விட ஒரு தொகுதி கூடுதலாக வாங்கிவிட்டோம் என்று ஜோடாங்கர் சொல்லிக்கொளளலாம். சிறந்த வழி என்ன என்றால் ராகு ல்காந்தியும், ஸ்டாலினும் போனில் பேசினார்கள். எல்லாம் சரியாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியினர் சொல்லிக் கொள்ளலாம். காங்கிரஸ் கட்சி 39 மக்களவை தொகுதிகளில், தலா ஓரிடம் தர வேண்டும் என்று தான் பிரச்சினையை தொடங்கினார்கள். இந்த கோரிக்கை நியாயம் என்றால், மற்ற கட்சிகளுக்கும் அந்த ஆசை இருக்கவே செய்யும். அதனால் இவர்களின் நோக்கம் என்பது நிறைவேற்ற முடியாத கோரிக்கையை வைத்து, கூட்டணியை முறித்துக்கொள்வதாக தான் இருந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைக்காக வந்துள்ள கிரிஷ் ஜோடாங்கரின் நோக்கமும் அதுதான். அதேநேரம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஜோடாங்கர் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் உண்மையாக இருந்தால் திமுக – காங்கிரஸ் இடையே பிரச்சினை தீரும்.

திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியாகிவிட்டால் தவெகவை, அதிமுக கூட்டணிக்குள் சேர்க்க வாய்ப்புள்ளதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை விரும்ப மாட்டார். அவர்கள் ஏற்கனவே விஜயை எவ்வளவு திட்ட முடியுமோ, அவ்வளவு திட்டிவிட்டார்கள். காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி வைப்பதாக அதிகளவில் வதந்திகள் பகிரப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி ஐதராபத்துக்கு வந்தது உண்மை. ஆனால் கட்சி நிகழ்ச்சிக்காக வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் புறப்பட்டு போய்விட்டார். ஆனால் ராகுல்காந்தியும், ஆதவ் அர்ஜுனாவும் சந்தித்து பேசியதாக வதந்திகள் பரவுகிறது. ஐதராபாத்துக்கு மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களால் இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ