காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி செல்வது 90 சதவீதம் உறுதியாகிவிட்டதாகவும், கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், இது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது :- தமிழக அரசியல் ஒரு நெருக்கடியான நிலைக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையப் போகிறது. ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ், தவெக உடன் கூட்டணி உடன்படிக்கையை எட்டிவிட்டது. அதிகாரப் பூர்வமாக திமுக கூட்டணியில் இருந்து விலகப் போகிறார்கள். மூப்பனார் த.மா.கா என்கிற கட்சியை தொடங்கி காங்கிரசை அழித்தது போன்று, காங்கிரசை மீண்டும் மூடப் போகிறார்கள்.
அதற்கு காரணம் ஐதராபாத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா உடன் ராகுல்காந்தி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி அழிந்து, பாஜகவை எதிர்க்க முடியாமல் போனதற்கு காரணம் தொடக்கம் முதலே ராகுல்காந்தி தான். பீகார் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததன் கரை போவதற்குள்ளாக காங்கிரஸ் தேசிய தலைமை இப்படியான முட்டாள் தனமான முடிவை எடுக்கிறது என்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் துடைத்து எறியப்பட போகிறது.

காங்கிரஸ் தரப்பில் விஜய் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பிரச்சாரத்திற்கு பயன்படுவார் என்று நினைக்கிறார்கள். ஆனால் விஜய் தன்னுடைய கட்சிக்கே பிரச்சாரம் செய்ய வர மாட்டார். இந்த நிலையில் காங்கிரசுக்கு எப்படி பிரச்சாரம் செய்வார். ஆந்திரா, கோவா மாநிலங்களில் கட்சியை குழிதோண்டி புதைத்த நபர்களை காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக போட்டால், அந்த கட்சி எப்படி வளரும். 2026 சட்டமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற கட்சி இருந்தது என்ற நிலையை நோக்கி தான் செல்கிறது. 25 தொகுதிகள் போதாது என்பதற்காக திமுக கூட்டணியை விட்டு செல்ல முடிவு செய்துவிட்ட நிலையில், விஜய் 50 இடங்கள் தந்தாலும் அதில் காங்கிரசால் வெற்றி பெற முடியுமா?
அதேவேளையில் காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பெரும் பகுதி திமுக உடன் செல்ல வேண்டும் என்கிற அமைப்பு வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, மறைமுகமாக தவெக உடன் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கூட்டணி பிடிக்கா விட்டால், மற்றொரு கட்சியுடன் பேசுவார்கள். ஆனால் ஒரே நேரத்தில் இருவரிடம் பேசுகிற நிலைமையில் தான் காங்கிரஸ் தலைமை உள்ளது.

ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் தவெக உடன் இணைந்தால் எதாவது பெரிதாக சாதிக்குமா என்றால் அப்படி எதுவும் நடைபெறாது. காங்கிரஸ் கட்சிக்கு 2 சதவீதம் வாக்குகளும், விஜய்க்கு 13 சதவீதம் வாக்குகள் தான் வரும். 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு எப்படி ஒரு நிலை ஏற்பட்டதோ? அப்படியான நிலை இவர்களுக்கு ஏற்படப் போகிறது. காங்கிரஸ் அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விஜயுடன் போக வேண்டும் என்று யார் யார் சொன்னார்களோ அவர்கள் எல்லாம் தெருவுக்கு வந்துவிடுவார்கள்.
அதேநேரம் தற்போது விஜயுடன் சென்று நிறைய தொகுதிகளில் போட்டியிட்டு நமது வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம். அதன் பிறகு 2029 மக்களவைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி சேர்வோம் என்றும் சொல்கிறார்கள். திமுக அப்படி இவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கப் போகிறது. அதேநேரம், காங்கிரசில் இருந்து பிரிந்து வருபவர்களுக்கு 10 முதல் 15 இடங்கள் வரை வழங்குவதற்கு திமுக தலைமை தயாராக உள்ளது.

அப்படி காங்கிரஸ் இரண்டாக உடைந்து புதிய கட்சி தோன்றினால், அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக அங்கீகாரம் வழங்கி சின்னம் கொடுத்துவிடும். காரணம் பாஜகவுக்கு காங்கிரசை அழிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாகும். எனவே புதிய காங்கிரஸ் கட்சி உருவாகப் போகிறது. தனி சின்னத்தில் திமுக கூட்டணியில் 15 இடங்களில் போட்டியிடப் போகிறார்கள். அதற்கான வேலைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காரணம் ராகுல்காந்தியை போன்ற அரசியல் அரை வேக்காடுகளை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது.
2029ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்று வரும் என்பதை ராகுல்காந்தியே முடிவு செய்துவிட்டார். பீகார் மாநிலத்தில் நட்புரீதியாக இருந்த ஆர்.ஜே.டி கட்சியை காலி செய்தார். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினை அண்ணா என்று சொன்னார். தற்போது முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவில் மிஸ்டர் ஸ்டாலின் என்று பதிவிடுகிறார். இதுவே ராகுல்காந்தியின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

எனவே இந்த முறை காங்கிரஸ் திமுக கூட்டணியில் இல்லை என்பது 90 சதவீதம் உறுதியாகி உள்ளது. விரைவில் அது முற்றிலும் முறியப் போகிறது என்கிற செய்தி வரப்போகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 2 சதவீதம் வாக்குகள் உள்ள நிலையில் அதை சரிகட்ட தேமுதிக, ஓபிஎஸ் போன்றவர்கள் கூட்டணிக்குள் வந்துள்ளனர். தற்போது திமுக, பாஜகவுக்கு எதிராக மட்டுமின்றி காங்கிரசுக்கு எதிராகவும் போராட போகிறது. கடைசியில் அழிவு என்பது காங்கிரசுக்கு தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


