முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருப்பதன் மூலமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ப.சிதம்பரம் சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்க நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடும் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், ப.சிதம்பரம் முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை என்பது, கூட்டணியில் காங்கிரஸ் தொடருவதற்கானதாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்கள் கூட்டணி தொடர வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அக்கட்சி எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் கூடுதல் இடங்கள் வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள்.
திமுக தரப்பில் புதிதாக கட்சிகள் சேர்ந்துள்ளதால், தங்களுடைய இடங்களையே குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே கூடுதல் இடங்களை கேட்காதீர்கள். கடந்த முறை பெற்றுக்கொண்ட இடங்களையே வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். சில கட்சிகளுக்கான இடங்களை குறைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதேநேரம் தேமுதிகவுக்கு எத்தனை இடங்கள் தரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. அது தெரியவந்ததும் அவர்களும் கூடுதல் இடங்களை கேட்கிறார். இந்த சூழலில்

டெல்லியில் ராகுலை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோடாங்கர், திமுக 25 இடங்களை மட்டுமே தருவதாக கூறியுள்ளதாகவும், இதனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்வது கடினம் என்றும் கூறியுள்ளார்.அதிக சீட்டுகள் வாங்குவது ராகுல்காந்தியின் நோக்கமாக இருக்கலாம். அதை ஜோடாங்கர் வெளிப்படுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் எதிர்க்கட்சிகளை பலவீனப் படுத்துவதற்காக தேமுதிக, ஒபிஎஸ் உள்ளிட்ட பலரை சேர்த்துள்ளனர். அதனால் தங்களுக்கும் சீட்டுகளை குறைத்துக்கொண்டு மற்றவர்களுக்கும் சீட்டுகளை குறைக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை புரிந்துகொண்டும் காங்கிரஸ் கூடுதல் இடங்களை கேட்கிறது எனில், ஒருவேளை கூடுதல் இடங்கள் கேட்டால் திமுக தராது. அதை காரணமாக வைத்து தவெக கூட்டணிக்கு சென்றுவிடலாம் என்று கருதுகிறார்கள் என தோன்றுகிறது. ஸ்டாலினை பொறுத்தவரை காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். காங்கிரஸ் வெளியேறினால் மோடியை எதிர்க்கும் அணி பலவீனமாக தோற்றமளிக்கும். அது தேர்தல் போரில் பின்னடைவை கொடுக்கவும் வாய்ப்புள்ளது. எனவே அவர் யோசிக்கிறார்.

இந்த சூழலில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அதற்கு செவ்வாய்க்கிழமைக்குள் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும். அதனால் காங்கிரசுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தலின் பேரில் ப.சிதம்பரம் முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். கார்கே, சோனியா காந்திக்கு திமுகவுடன் கூட்டணியை தொடர தான் விருப்பம். கார்கே வெளியிட்ட சமூக வலைதள பதிவில் ஸ்டாலினுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதேநேரம் ராகுல்காந்தி சகோதரர் என்று போடாதது சர்ச்சையாகியுள்ளது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் ஒரு மனம் திறந்த பேச்சுவார்த்தை தேவைப்பட்டது. அதன் காரணமாக ப.சிதம்பரம் முதலமைச்சரை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவதற்கு வாய்ப்பு உள்ளது. இரு தரப்புமே தங்களது நிலைப்பாட்டில் இருந்து சற்று கீழிறங்கி வர வேண்டுடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி நடந்தால் திமுக – காங்கிரஸ் ஒன்றுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ், தவெக கூட்டணியுடன் செல்வது முட்டாள் தனமான முடிவாகும். விஜய்க்கு செல்வாக்கு உள்ளது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அவை ஓட்டாக விழுமா? என்று தெரியாது. இந்த தேர்தலில் அவர் எவ்வளவு வாக்குகள் வாங்குகிறார் என்பதை பொறுத்து காங்கிரஸ் முடிவு எடுக்க வேண்டும். மோடியை எதிர்ப்பதில் தேசிய அளவில் காங்கிரஸ் முதன்மையான கட்சியாக இருப்பதால் அவர்கள் கூட்டணியில் இருப்பது அவசியமாகிறது. அதனால் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்று திமுக விரும்புகிறது. காங்கிரஸ் இல்லாமலே திமுக வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய விஷயமாகும்.
ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5000 வழங்கியது, தற்போது 40 லட்சம் பேருக்கு ரூ.2000 கொடுத்திருப்பதை பார்க்கிறபோது காங்கிரஸ் இல்லாமல் வெற்றி பெறுவதற்கான வியூகத்தில் செல்கிறாரோ என்கிற கேள்வியை எழுப்புகிறது. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது அதை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். திமுக கூட்டணி, பாஜக எதிர்ப்பில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் விஜய் எந்த அளவுக்கு பாஜகவை எதிர்ப்பார்? என்கிற கேள்வி எழுகிறது. அதேநேரம் சிதம்பரம் போன்றவர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்கிறபோது கூட்டணி தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே தோன்றுகிறது.

காங்கிரஸ் தலைமை, தமிழ்நாட்டில் கட்சி தன்னிச்சையாக வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கு காங்கிரஸ் கட்சி வளரவில்லை. அந்த கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ-க்கள் யாரும் அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. மக்களுடன் மக்களாக இணைந்து போராட்டம் நடத்துவது கிடையாது. தேர்தல் வந்தால் அதிக இடங்கள் வாங்கி போட்டியிடுவது என்றுதான் அவர்கள் செல்கிறார்கள். மக்களை பொறுத்தவரை மத நல்லிணக்க சக்திகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாஜகவுக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்து சென்றால், அவர்கள் மீது மக்களுக்கு கோபம் வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


