தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு TAPS எனப்படும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது:- இது அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். சரியான நேரத்தில் முதல்வர் அறிப்பை வெளியிட்டு இருக்கிறார். நல்ல காரியங்கள் செய்வதற்கு அரசியல் பயன்படுத்தப் பட்டால் நல்லதுதான். இந்த பிரச்சினைக்கு பெருமளவு தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்களிப்பு செய்ய வேண்டியது இல்லை. இந்த திட்டத்தில் பணியாளர்கள் 10 சதவீதம் பங்களிப்பு செய்ய வேண்டும்.
அதையும் தாண்டி வருடத்திற்கு ரூ.11,000 கோடி தமிழ்நாடு அரசு செலவழிக்க போகிறது. இந்த பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்கள் யாரும் விடுபடவில்லை. குறிப்பிட்ட பணிக்காலத்தை நிறைவு செய்யாதவர்களுக்கும் இதில் சிறப்பு திட்டம் வைத்துள்ளனர். எனவே உண்மையாகவே யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று திட்டமிட்டு கொண்டு வந்துள்ளனர். இதற்காக பாடுபட்ட ஆசிரியர்களுக்கும், அனுமதி அளிக்கக் கூடிய அமைச்சர்களுக்கும், அனுமதி வழங்கிய முதல்வருக்கும் நிச்சயமாக அரசு ஊழியர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

புதிய பென்ஷன் திட்டத்தால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை அரசு எப்படி சமாளிக்கும் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் ஜிடிபியை பொறுத்து அரசு கடன் வாங்க முடியும். கடனை வாங்கவும், திருப்பி செலுத்துவதற்கான ஆற்றலும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. வரம்பை மீறி அரசு கடன் வாங்க வில்லை. உற்பத்தியை , வேலைவாய்ப்பை திமுக அரசு பெருக்கி உள்ளது. பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது. இவற்றை எல்லாம் மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அரசின் திட்டங்கள் கடைக்கோடிக்கும் சென்று சேர்ந்ததா? என்றால் அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தென் மாவட்டங்களில் பெரிய பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசில் அனைவருக்கும் சமமான ஓய்வூதிய திட்டம் கடும் போராட்டங்களுக்கு பிறகு தான் வழங்கப்பட்டது. ஆனால் ககன்தீப் சிங் பேடி அறிக்கை கொடுத்துள்ளார். அரசுக்கு நிதிச்சுமை இருந்தாலும் பரவாயில்லை. அரசு ஊழியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு செய்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அரசின் மொத்த வருவாயையும், அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்துள்ளன. மாதந்தோறும் ரூ.1000 வாங்கும் பெண்கள் அரசு ஊழியர்களா? தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்களை பெறும் மாணவ – மாணவிகள் அரசு ஊழியர்களா? முதலில் ஏன் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றார்கள்? அடுத்து இவ்வளவு தாமதமாகத்தான் நிறைவேற்றினார்கள் என்பார்கள். எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
ஜாக்டோ – ஜியோ, அரசின் அறிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. தாங்கள் எதிர்பார்த்ததை விட முதல்வர் அதிகமாக கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கியது போன்று, குறிப்பிட்ட பணிக்காலத்தை நிறைவு செய்யாதவர்களுக்கும் ஓய்வூதியத்தில் சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது அரசின் மனிதாபிமானத்தை காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு குறித்து பேச அறுகதை இல்லாதவர்கள் பாஜகவினர். போதைப் பொருள் கட்டுப்படுத்த முடியாவிட்டால் போலிசை மத்திய அரசிடம் கொடுங்கள் என்று அண்ணாமலை சொல்கிறார். இந்த விவகாரத்தில் செயல்பட வேண்டிய மத்திய அரசு, செயல்படாமல் உள்ளது. எனவே பாஜகவினர் அரசை குறை சொல்ல தகுதியே கிடையாது. தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்று பார்க்கும்போது மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடங்களில் உள்ளவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்காக நிறைய பேசுகிறார். ஆனால் எந்த அளவுக்கு பொறுப்புணர்வோடு பேசுகிறார்? தமிழ் நாட்டில் குற்றங்கள் நடைபெறும்போது அதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுப்பது சரியான விஷயம். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை வைத்து தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
