இந்தியா – அமெரிக்க வர்த்தக விவகாரம் குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.
நாடாளுமன்றம் இன்று துவங்கிய நேரத்தில் இருந்தே இரு அவைகளிலும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கேள்வி எழுப்பினார்கள். இதன் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் மாநிலங்களவை அலுவல்கள் பாதிக்கப்பட்டது. அப்போது மாநிலங்களவையின் என்.டி.ஏ கூட்டணி தலைவர் ஜே.பி நட்டா, குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்தில் பேசத் தொடங்கினார்.

அவர் பேசும் போது இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களும் மத்திய அரசால் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்க தயாராக உள்ளது என தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக துறை சார்ந்த மத்திய அமைச்சர் எதிர்க்கட்சிகள் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் இன்றைய தினமே பதிலளிக்க தயாராகவுள்ளனர். ஆனால், அவை நேரத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற வகையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் செயல்பாடு பொறுபின்மை என்றும், எதிர்க்கட்சி எம்.பி-க்களின் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்க தயாராக இருந்தும் அதை எதிர்க்கட்சிகள் கேட்க தயாராக இல்லை என குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அனைவரும் கூட்டாக வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்புக்கு பிறகு மாநிலங்களவை அலுவலர்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


