தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறாா். கூட்டணி தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுகுறித்து கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்தவும், புகார் அளிக்கவும் அவர் பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என கட்சி தலைமையிலிருந்து முன்பே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை மீறி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதாக மாணிக்கம் தாகூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும், திமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் மாணிக்கம் தாகூரும், அவரது ஆதரவாளரான ராஜேஷ் குமார் மட்டுமே கூட்டணி குறித்து எதிர்மறை கருத்து பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணிக்கம் தாகூரின் பேச்சு கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் புகார் கடிதத்துடன் கே. செல்வப்பெருந்தகை டெல்லி சென்று கட்சி உயர்மட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் திமுக கூட்டணியைத் தொடர்ந்து வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் செயல்பட்டு வரும் சூழலில், இந்த உள்கட்சி சர்ச்சை புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


