ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், உலகின் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து கவலை எழுந்துள்ளது.


வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றிய கப்பல்கள் இந்தியாவுக்கு வர முக்கியமாக ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தையே பயன்படுத்துகின்றன. இந்த கடல் பாதை முடங்கினால், கச்சா எண்ணெய், எல்.பி.ஜி., சி.என்.ஜி. போன்ற எரிபொருட்களின் வரத்து நேரடியாக பாதிக்கப்படும்.
தற்போது நான்கு நாட்களாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு எரிபொருள் கப்பல்கள் வருவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள மூல எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மற்றும் கடலில் நிறுத்தப்பட்ட கப்பல்களில் சில அளவு கச்சா எண்ணெய் இருப்பு வைத்திருக்கப்படுகிறது. எனினும், தற்போதைய நிலவரப்படி சுமார் இரண்டு வாரங்களுக்கு தேவையான எல்.பி.ஜி. கையிருப்பு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. உலகளவில் எல்.பி.ஜி. நுகர்வில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் டிரம்ப் அளித்துள்ள பேட்டியில், இந்த மோதல் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் அந்த அளவுக்கு நீண்டால், இந்தியாவில் எல்.பி.ஜி., சி.என்.ஜி., கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது.
தட்டுப்பாடு இல்லாத சூழலிலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதற்கான வாய்ப்பு அதிகம். அதன் தாக்கமாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன் ஹோர்முஸ் நீரிணை வழியாக சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவை ஈரான் படையினரால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தாக்குதலில் ஒரு எண்ணெய் கப்பலில் பணியாற்றிய இந்திய நாட்டு பணியாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் தாக்குதலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போர் விரைவில் முடிவுக்கு வந்தால் இந்தியா பெரிய சிக்கலில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் மோதல் நீடித்தால், எரிபொருள் விநியோகம் மற்றும் விலை உயர்வு ஆகிய இரண்டும் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.
”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது”– வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு…


