வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது.
நடப்பு 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது.

தொடர் வெற்றியில் இந்தியா
கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையைத் தக்கவைத்த முதல் அணி மற்றும் மூன்று முறை கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
பரிசுத் தொகை விவரம்
இந்த இமாலய வெற்றியைப் பாராட்டும் விதமாக, பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா இந்த மெகா பரிசுத் தொகையை அறிவித்தார். கடந்த 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பை வென்றபோது ரூ.125 கோடி வழங்கப்பட்டது. தற்போது அதனை விட ரூ.6 கோடி கூடுதலாக உயர்த்தி, மொத்தம் ரூ.131 கோடி வழங்கப்பட உள்ளது.
அணியில் இடம்பெற்ற 15 வீரர்களுக்கும் தலா ஒரு குறிப்பிட்ட தொகை சமமாகப் பிரித்து வழங்கப்படும்.
தலைமைப் பயிற்சியாளர் மற்றும் இதர பயிற்சியாளர்களுக்கும் கௌரவமான தொகை வழங்கப்படும்.
பிசியோதெரபிஸ்ட்கள், த்ரோ-டவுன் ஸ்பெஷலிஸ்ட்கள் உள்ளிட்டோருக்கும் பங்கு உண்டு.
வீரர்களைத் தேர்வு செய்த தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
“இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டின் பொற்காலத்தைக் குறிக்கிறது. சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று, பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட வீரர்களின் அர்ப்பணிப்பைக் கௌரவிப்பதில் பிசிசிஐ பெருமிதம் கொள்கிறது,” என பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி (ICC) வழங்கும் பரிசுத் தொகையான சுமார் ரூ.27.48 கோடி தவிர, பிசிசிஐ வழங்கும் இந்த ரூ.131 கோடியும் சேர்ந்து இந்திய வீரர்களுக்கு பெரும் ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி…மாநிலங்களவையில் பாராட்டு…
