Homeசெய்திகள்சினிமா69 வயதிலும் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிவரும் பிரபல நடிகை!!

69 வயதிலும் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிவரும் பிரபல நடிகை!!

-

- Advertisement -

69 வயதிலும் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிவரும் பிரபல நடிகை!!இணையத்தை திறந்தாலே இந்த ரம்பா ஹோ!, சம்பா ஹோ பாடல்தான் டிரெண்டிங்கில் சுற்றி வருகிறது. இந்தப் பாடல் 1981ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘‘அர்மான்” படத்தில் இடம்பிடித்த பாடல். சமீபத்தில் வெளியாகி 1000 கோடி வசூல் சாதனை செய்த ‘துரந்தர்’ படத்தின் ஒரு மாஸ் சண்டைக் காட்சியில் பயன்படுத்தி அதில் ரன்வீர் சிங் நடித்திருப்பார். அதன் பிறகு வைரல் டிரெண்டிங்கில் சுற்றிவருகிறது. இந்தப் பாடலைப் பாடியவர் பழம்பெரும் பாடகி உஷா உதுப். கம்பீரமான குரல், பீட், நடனம் என இந்தப் பாடல் அப்போதே படு ஃபேமஸ். இப்போது ‘‘துரந்தர்” படத்திற்கு பிறகு ரீல்ஸ், ஷார்ட்ஸ் என வைரலாகிவருகிறது. இதற்கிடையில் இந்தப் பாடலுக்கு அப்போது நடனமாடியவர் கல்பனா ஐயர், இப்போது அவருக்கு வயது 69. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கல்பனா ஐயர் நடனம் ஆட இன்னும் மில்லியன்களின் பார்வையாளர்களைப் பெற்று டிரெண்டாகி வருகிறது. மேலும் இணையம் கல்பனா ஐயர் யார்? எனவும் பேசத் துவங்கியிருக்கிறது.

90களில் வெளியான ‘‘ஜுனூன்” தொடர் பார்த்தவர்களுக்கு கல்பனாவை பார்வதியாக நன்கு தெரியும். அதற்கு முன்பு வரை பாலிவுட்டின் டிஸ்கோ பாம் என்றால் அது கல்பனாதான். வில்லன் கோட்டை, அல்லது வில்லன் வேட்டை என எதுவானாலும் கல்பனாவின் பீட் நடனம் அங்கே இருக்கும். பாலிவுட்டின் டிரெண்ட் செட்டர் என்றாலும் பொருந்தும். கிளாமர், நடனம் என பார்வையாளார்களை கட்டிப் போட்டுவிடும் அழகி மிஸ். இந்தியா ரன்னர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கல்பனா ஐயர் 1956 ஜூலை 26ஆம் தேதி மும்பையில் பிறந்தவர். தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த அவர், மரபுவழி மதிப்புகளும் ஒழுக்கங்களும் நிறைந்த சூழலில் வளர்க்கப்பட்டவர். சிறுவயதிலேயே குடும்பத்தின் பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டதால், மிகவும் இளம் வயதிலேயே வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய கட்டாயம் இருந்தது கல்பனாவுக்கு. பன்னிரண்டு வயதிலேயே குடும்பச் செலவுகளை சமாளிக்க மேடை நிகழ்ச்சிகளில் ஆடி, பாடி சம்பாதிக்கத் தொடங்கியிருக்கிறார்.

we-r-hiring

அவரது கல்வி பற்றிய தகவல்கள் அதிகமாகப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், சிறுவயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை காரணமாக வழக்கமான பயிற்சிகளோ, நடனப் பாடங்களோ இல்லாமல் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே கலை உணர்வை வளர்த்துக் கொண்டுள்ளார். தொழில்முறை பயிற்சி இல்லாமல் இயல்பாகவே நடனம் கற்றுக்கொண்டவர் என்ற அடையாளமே பின்னர் அவரை மேடைகளிலும், சினிமாவிலும் கவனிக்க வைத்தது.1978ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் கல்பனா முதல் ரன்னர்-அப் பட்டம் பெற்றது அவரது வாழ்க்கையின் முக்கிய திருப்பமாக அமைந்தது. அந்த வெற்றியின் மூலம் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி அதே ஆண்டில் நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டியிலும் கலந்து கொண்டு, முதல் 15 அரையிறுதி போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த அழகிப் போட்டி மேடையே அவருக்கு சினிமா உலகுக்கான கதவைத் திறந்தது.

அழகிப் போட்டிக்குப் பிறகு அவரது தன்னம்பிக்கை நிறைந்த தோற்றமும் மேடையில் அவரின் கம்பீரமும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு 1980ஆம் ஆண்டு வெளியான ‘மனோகாமனா’ என்ற இந்தி படத்தின் மூலம் அவர் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதே காலகட்டத்தில் பல படங்களில் நடனக் காட்சிகளில் தோன்றி கவனம் பெற்றார். குறிப்பாக ‘லூட்மார்’ உள்ளிட்ட படங்களில் ஆடிய பாடல்கள் அவரை விரைவில் பாலிவுட்டின் டிஸ்கோ முகமாக மாற்றியது. மிஸ் இந்தியா மேடையில் பெற்ற அந்த அங்கீகாரம், மேடைகளில் உருவான அனுபவம், சிறுவயதிலிருந்தே வந்த போராட்ட மனப்பாங்கு, இந்த மூன்றும் சேர்ந்தே கல்பனா ஐயரை சினிமாவில் தனித்துவமான நடனக் கலைஞராகவும், பின்னர் வில்லத்தன கவர்ச்சி கதாபாத்திரங்களின் அடையாளமாகவும் உருவாக்கின. அவரது ஆரம்ப வாழ்க்கை சாதாரண பின்னணியிலிருந்தாலும், அதையே ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொண்ட விதமே அவரது பயணத்தின் சிறப்பு.

கல்பனா ஐயர் என்ற பெயர். பளபளப்புக்கும் பாலிவுட்டில் 1980களின் கால டிஸ்கோ உலக முகவரியாக மாறியது. அக்காலத்தில் திரை உலகம் புதிய இசை, புது நடன வடிவங்கள், மேற்கு கலாச்சாரத்தின் தாக்கம் ஆகியவற்றால் வேகமாக மாறிக் கொண்டிருந்தது. அந்த மாற்றத்தின் அடையாளமாகவே கல்பனா ஐயர் அறிமுகமானார். கவர்ச்சியான நடனங்கள், தைரியமான உடைகள், தன்னம்பிக்கை நிறைந்த உடல் மொழி ஆகியவற்றால் அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணமும் ரசிகர்களை கவர்ந்தது.மும்பையைச் சேர்ந்த கல்பனா ஐயர், சினிமாவுக்கு வருவதற்கு முன் மாடலிங் உலகில் தன்னை நிரூபித்தவர். அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு கவனம் பெற்றார். அதன் பிறகு விளம்பரங்கள், மேடை நிகழ்ச்சிகள் வழியாக சினிமா வாய்ப்புகள் அவருக்கு சாத்தியப்பட்டன. அப்போது இந்தி சினிமாவில் டிஸ்கோ இசை உச்சத்தை எட்டியிருந்தது. அந்த அலையில் கல்பனா ஐயர் நடனக் கலைஞராகவும், கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகையாகவும் விரைவில் பிரபலமானார்.

அவரது நடனங்களில் ஒரு தனித்துவமான மேஜிக் இருந்தது. அசைவுகளிலும், முகபாவங்களிலும் ஒரு நகைச்சுவை கலந்த கவர்ச்சி வெளிப்பட்டது. கதையின் மையத்தில் இல்லாவிட்டாலும், அவர் தோன்றும் காட்சிகள் படத்துக்கு கமர்சியல் பவர் தரும் என்று தயாரிப்பாளர்கள் நம்பினர். அதனால் பல படங்களில் வில்லன் கூட்டத்தின் கவர்ச்சிக் கதாபாத்திரங்கள், கிளப் டான்சர், கேபரே கலைஞர் போன்ற வேடங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்தக் காலத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் பலர் இருந்தாலும், கல்பனா ஐயரின் தனித்துவம் அவரது உடல் மொழியிலும், திரைநிகழ்ச்சிகளில் காட்டிய தைரியத்திலும் இருந்தது. 1980களின் இந்தி சினிமாவில் வில்லன் உலகத்துக்கும், கிளப் கலாச்சாரத்துக்கும் இடையே ஒரு கவர்ச்சியான பாலமாக இருந்தார் கல்பனா ஐயர். பல படங்களில் அவர் நடித்த எதிர்மறை கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்தது. சில சமயங்களில் கதாநாயகியை விடவும் அவர் தோன்றும் காட்சிகள் ரசிகர்களின் நினைவில் நின்றன.

சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே, கல்பனா ஐயர் திடீரென திரை உலகை விட்டு விலகினார். பலருக்கும் அது ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர் வெளிநாட்டில் குடியேறி, முற்றிலும் வேறு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். புகழ், விளக்குகள், கேமராக்கள் ஆகியவற்றிலிருந்து தன்னைத் தள்ளி வைத்து அமைதியான தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார். கொஞ்ச காலம் நடிகர் ராஜன் சிப்பியின் துபாய் ஹோட்டலுக்கு மேனேஜராகவும் வேலை செய்தார். பின்னர் தூர்தர்ஷனில் ‘‘காஷிஷ்”, ‘‘ஜுனூன்”, ‘‘ ஃபர்மான்” உள்ளிட்ட தொடர்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் மொத்தமாகவே சினிமாவை விட்டு விலகியவர் பல காலங்கள் எளிமையான தனிமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். இந்த மாற்றம், சினிமா உலகின் பிரகாசம் எவ்வளவு தற்காலிகமானது என்பதையும் நினைவூட்டுகிறது.

இவர்தான் ரஜினி நடித்த ‘‘நல்லவனுக்கு நல்லவன்” படத்தின் ‘வச்சிக்கவா உன்ன மட்டும்’ பாடலிலும் நடனம் ஆடியிருப்பார். திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையான வாழ்க்கையைதான் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு பேட்டியில் ‘‘நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது குறித்து இப்போது வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்“. இன்றும் அதே துள்ளல், கம்பீர மேடை நடனம் என 69 வயதிலும் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டி வருகிறார் கல்பனா.

சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!

MUST READ