Homeசெய்திகள்அரசியல்தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? - நயினார் நாகேந்திரன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்

-

- Advertisement -

சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையும் விவகாரம் குறித்து தன்னிடம் தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளாா்.தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? - நயினார் நாகேந்திரன் பதில்

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தேர்தல் ஊடக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ,பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

we-r-hiring

இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், அரசியல் பேச்சாளர்கள் சமூக ஊடகங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தேர்தல் காலத்தில் கட்சி தலைமையின் வழிகாட்டுதலின்படி கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும், பாஜக அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு கஞ்சா பரவல் முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும் கூறினார்.

மேலும், தன்னிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார். அதே நேரத்தில் கூட்டணியில் யார் யார் இணைவார்கள் என்பது குறித்து தற்போது பேச முடியாது என்றும் கூறினார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இருப்பது போல செயற்கையாக ஒரு “நேரேட்டிவ்” உருவாக்க திமுக முயற்சி செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். திருப்பதி சென்றபோது அங்கு பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் இல்லை, ஆனால் தமிழகத்தில் அதிக கூட்டம் காணப்பட்டது என்றும், திமுகவினர் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று தட்டுப்பாடு ஏற்பட்டது போல தோற்றம் உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், இன்றைய அரசியல் தேர்தல்கள் நிலத்தில் மட்டுமல்லாமல் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் மூலமும் நடைபெறுகின்றன என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பிரதமர் மோடி இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளார் என்ற தவறான தகவல் பரப்பப்பட்டதாகவும், அதை எதிர்க்க முடியாமல் அந்த தகவல் மக்களிடம் பரவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தவர் முன்னாள் பிரதமர் நேரு எனவும், அவர் மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதங்களில் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் மேக்வால் கூறினார். மேலும், பாஜக 400 இடங்களைத் தாண்டினால் அரசியலமைப்பை மாற்றிவிடும் என்ற போலியான கருத்தும் உருவாக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

முன்னாள் தலைவரான ராஜாஜியின் குறித்து பேசும்போது, ராஷ்ட்ரபதி பவனில் அவரது சிலை நிறுவப்பட்டது வரலாற்றை மாற்றுவது அல்ல; வரலாற்றை வெளிப்படுத்துவதாகவே பார்க்க வேண்டும் என்றும் மேக்வால் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் திமுக அரசு மோசமான ஆட்சி நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார். தலைமை டிஜிபி பதவியை கூட நிரப்ப முடியாத நிலை இருப்பதாகவும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதுகுறித்து தன்னிடம் எந்த தகவலும் இல்லை என்றார். விஜய் டெல்லி சென்றிருப்பது கரூர் சம்பவ விசாரணைக்காக மட்டுமே என்றும், அதை வேறு விஷயங்களுடன் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் கூறினார்.

மேலும், அதிமுகவுடன் இணைந்து வரும் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும், அதன் பிறகு அரசியல் நிலவரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

விஜய் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு…234 தொகுதிகளிலும் த.வெ.கவினர் டெபாசிட் இழந்து விடுவர் – பி.டி. செல்வகுமார் பேட்டி

MUST READ