Homeசெய்திகள்உலகம்ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

-

- Advertisement -

ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளருமான அலி லாரிஜானி (Ali Larijani), இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிப்ரவரி இறுதியில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் மிக முக்கிய அதிகார மையமாக லாரிஜானி கருதப்பட்ட நிலையில், இந்தப் படுகொலை மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் (IDF) நேற்று இரவு ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நிலைகளை இலக்கு வைத்து துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தினர். இந்தத் தாக்குதலில் அலி லாரிஜானி தங்கியிருந்த கட்டிடம் தகர்க்கப்பட்டதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இதே தாக்குதலில் ஈரானின் பாசிஜ் (Basij) படையின் தளபதி கோலம்ரேசா சுலைமானியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக (மார்ச் 16), அலி லாரிஜானி இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு உருக்கமான பகிரங்கக் கடிதத்தை எழுதியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

“அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வஞ்சகமான ஆக்கிரமிப்பை ஈரான் தற்போது எதிர்கொண்டுள்ளது.”

“இஸ்லாமிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். இந்தப் போரில் நீங்கள் எந்தப் பக்கம் இருக்கப் போகிறீர்கள்?”

“முஸ்லிம் நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருந்தால் மட்டுமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.”

இந்தக் கடிதம் வெளியான சில மணி நேரங்களிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் செய்தி குறித்து ஈரான் தரப்பில் இதுவரை முறையான உறுதிப்படுத்தல் வழங்கப்படவில்லை. இருப்பினும், லாரிஜானி கொல்லப்பட்ட செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது ஈரானின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.

MUST READ