Homeசெய்திகள்அரசியல்வெளியானது திமுக தேர்தல் அறிக்கை... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன்...

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

-

- Advertisement -

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்காற்றிய குழு உறுப்பினர்களுக்கு, முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து இந்த அறிக்கையை வடிவமைத்துள்ளது.

we-r-hiring

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், “இந்தத் தேர்தல் அறிக்கை தமிழகத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் மகத்தான ஆவணம். மக்களின் பேராதரவுடன் 7-வது முறையாக திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

வாக்குறுதி மழை: ஸ்டாலின் அறிவித்த முக்கிய அம்சங்கள்

திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையில் பொதுமக்களைக் கவரும் வகையிலான பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமானவை:

  1. மகளிர் உரிமைத் தொகை டபுள்: தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

  2. காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அரசுப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை உள்ள காலை உணவுத் திட்டம், இனி 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

  3. இல்லத்தரசி திட்டம்: வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்ஸி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்.

  4. மாணவர்களுக்கு லேப்டாப்: உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

  5. கல்விக்கடன் ரத்து: மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யத் தேவையான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  6. விவசாயிகளுக்கு குட் நியூஸ்: நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தப்படும்.

  7. இலவச மின்சாரம்: விவசாயிகளுக்கு மீட்டர் இல்லாத இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

  8. சொந்த வீடு கனவு: அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

  9. பெட்ரோல், டீசல் விலை: எரிபொருள் விலையைக் குறைக்க மாநில வரி குறைப்பு குறித்துப் பரிசீலிக்கப்படும்.

  10. சுங்கச்சாவடிகள் அகற்றம்: மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

  11. மருத்துவக் காப்பீடு: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வரம்பு ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்படும்.

  12. புதுமைப் பெண் திட்டம்: மாணவிகளுக்கான மாத உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.

  13. பால் விலை: பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும்.

  14. செம்மொழி மாநாடு: சென்னையில் பிரம்மாண்டமான முறையில் உலகச் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.

  15. வேலைவாய்ப்பு & உள்ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவச் சேர்க்கை உள் ஒதுக்கீடு மற்றும் இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    “இந்த தேர்தல் அறிக்கை தமிழகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் ஒரு மகத்தான ஆவணம்” என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த நிகழ்வின் போது பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    ஏற்கனவே 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக நேற்று வெளியிட்டிருந்த நிலையில், இன்று தேர்தல் அறிக்கையும் வெளியாகியுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ