தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கட்சி தொடங்கியதும் நேரடியாக முதலமைச்சர் நாற்காலி என்ற பெரும் கனவுடன் 2026 தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைத்து, செல்வாக்குள்ள ஆளும் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி என்கிற ஆசையை காட்டினார். ஆனால் அதற்கு துளியும் மதிப்பு தராத திருமாவளவன், விஜய் தலைமையிலான கூட்டணியை புறக்கணித்தார்.

அதன்பிறகு காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு அழைத்து பார்த்தார். அந்த முயற்சியும் கைகூடவில்லை. இறுதியில் தனித்து களம் காண்பது என்ற முடிவுக்கு வந்தார்.
இந்நிலையில் ஏப்ரல் 23 தேர்தல் என்றும் மார்ச் -30 வேட்பு மனு தாக்கல் என்றும் தேர்தல் ஆணையம் தேதி அறிவித்தது. அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் என்று முதல்நாள் பிரச்சாரம் ரூட் போடப்பட்டிருந்தது.
காலையில் பெரம்பூர் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர் சாலை வழியே கொளத்தூர் சென்றார். சாலை முழுவதும் போக்குவரத்து பெரிய அளவில் பாதிப்படைந்தது. கொளத்தூர் தொகுதி முதலமைச்சர் தொகுதி என்பதால் சென்னை முழுவதிலும் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்திருந்தனர். வாகனத்தில் நின்று விஜய் பேசும் போது தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பி கொண்டாடினார்கள்.
மதிய உணவிற்கு பின்னர் வில்லிவாக்கம் தொகுதி சிட்கோ நகர் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை அறிந்து ஏராளமான ஆண்கள், பெண்கள் குவிந்திருந்தனர். வெயில் தாக்கம் அதிகமாக இருந்தும் விஜய் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் காத்திருந்தனர். 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் விஜய் வரவில்லை என்றதும் சோர்வுடன் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் பூ கடை குமார், காத்திருந்த மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். விஜய் இன்னொரு நாள் பிரச்சாரத்திற்கு வருவார். தற்போது அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
பெரம்பூரில் பிரச்சாரத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை – தவெக பரபரப்பு புகார்
