
கோடைக்காலத்தில் முக்கிய கட்டமான அக்னி நட்சத்திரம் இன்று (மே 04) தொடங்குகிறது.

கோடைக்காலத்தில் வெப்பம் உச்சக்கட்டமாக இருக்கக் கூடிய நான்கு வாரங்கள் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தாண்டின் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி வரும் மே 29- ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்கும். இந்த நான்கு வாரங்களில் வெப்பம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மக்கள், குறிப்பாக முதியோர்கள், குழந்தைகள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் மேக மூட்டம் நிலவுவதாலும் கோடை வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடுமையாக வெயில் இருக்கும் நேரத்தில் பொதுமக்கள் இளநீர், பழங்கள் போன்றவையை அதிகளவில் பருக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.