
வாழ்க்கை என்பது நாம் மட்டும் தனியாக ஓடுகின்ற பந்தயமல்ல; அப்படி தனியாக ஓடுவது பந்தயமே இல்லை.

நாம் வாழும் வாழ்க்கை முறையில் நெறிமுறைகள் தவறாமல் வாழ்வதற்கு நம்மைத் தட்டிக் கேட்கவும், கட்டுப்படுத்தவும், நாம் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் நம் வாழ்க்கையில் ஒருவரை அனுமதிக்க வேண்டும். “நான் மிகப்பெரிய புத்திசாலி, எனக்கு எது நல்லது எது கெட்டது என்று நன்கு தெரியும், எனக்கு அறிவுரை சொல்லவோ, கட்டுப்படுத்தவோ, நல்வழிப்படுத்தவோ யாரும் தேவையில்லை” என்று ஒரு மனிதன் எப்போது நினைக்கிறானோ, அப்போதே அவனுடைய வீழ்ச்சிக்கான அஸ்திவாரம் ஆரம்பமாகி விடுகிறது.
உலகின் மிகச்சிறந்த கார் பந்தய வீரராக இருந்தாலும், அவருக்கு ஓடுப் பாதையை வழிகாட்டவும், காரின் வேகத்தைக் கணிக்கவும் ரேடியோவில் ஒரு ‘இன்ஸ்ட்ரக்டர்’ பேசிக்கொண்டே இருப்பார். “நான் தான் சிறந்த டிரைவர், எனக்கு எல்லாம் தெரியும்” என்று அந்த வீரர் தனது ஹெட்செட்டைக் கழற்றி எறிந்தால், அவருக்கு விபத்து ஏற்படுவது நிச்சயம். அதுபோலத்தான் நம் வாழ்க்கையும்.

ஒரு மனிதன் எப்போது தனக்குள் ரகசியங்களைச் சேமிக்கத் தொடங்குகிறானோ, அப்போதே அவன் தவறான பாதைக்கு ‘நேரடி விசா’ வாங்கிவிடுகிறான். நாம் ஒரு தவறைச் செய்யும்போது, அதை நம்மைச் சார்ந்த ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது அந்தத் தவறு அங்கேயே முற்றுப்பெற்றுவிடும். ஆனால், “இதை யாரிடமும் சொல்லக் கூடாது, நாமே யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடலாம்” என்று ரகசியமாக பாதுகாக்கும்போது, அது ஒரு பழக்கமாக மாறிவிடுகிறது. அந்த பழக்கம் நம்மை அடிமையாக்கி, அடுத்த பெரிய தவறைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது.
நாம் செய்யும் சிறிய தவறுகள் ஆரம்பத்தில் ஒரு மெல்லிய சிலந்தி வலை போலத்தான் இருக்கும், நாமே நினைத்தால் அதை அறுத்துவிடலாம். ஆனால் அதை ரகசியமாக மறைத்து போற்றி பாதுகாக்கும்போது அது நம்மைப் பூட்டி வைக்கும் இரும்புச் சங்கிலியாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் நாம் நினைத்தாலும் வெளியே வரமுடியாமல் போய்விடுகின்ற ஆபத்தில் சிக்கிக் கொள்கிறோம்.
நாம் எவ்வளவுதான் பெரிய பதவியிலோ, சமூக அந்தஸ்திலோ அல்லது ஆன்மீக உயரத்திலோ இருந்தாலும், நமக்கென்று ஒரு நல்ல நட்பு வட்டாரம் அல்லது ஒரு வழிகாட்டி இருக்க வேண்டும். அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்றால் நம்முடைய முகஸ்துதி பாடி நம்மை ஏமாற்றாதவராக இருக்க வேண்டும். நம் முகத்திற்கு நேராக உண்மையைச் சுடச்சுடச் சொல்பவராக இருக்க வேண்டும்.
நாம் தவறு செய்யும்போது, “நீ செய்வது தவறு, இதை உடனே நிறுத்து!” என்று நம் சட்டையைப் பிடித்துக் கேட்கும் துணிச்சல் உள்ளவராக இருக்க வேண்டும். அவர் உங்கள் நெருங்கிய நண்பராகவோ, மனைவியாகவோ, கணவனாகவோ, பெற்றோராகவோ அல்லது ஒரு நல்ல ஆலோசகராகவோ இருக்கலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மாபெரும் தத்துவஞானி திருவள்ளுவர் இதைத்தான் தன் குறள் வழியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்”
தன் தவறைப் பார்த்து, அதைக் கடிந்து அறிவுரை கூறும் பெரியோரின் துணை இல்லாத, பாதுகாப்பற்ற மன்னன், தன்னை அழிக்கக்கூடிய பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கூட, தானாகவே அழிந்து போவான். இது இன்று நாம் வாழும் வாழ்க்கை முறைக்கு முற்றிலும் பொருந்தும்.
நம்மைத் தட்டிக் கேட்க ஒரு ஆள் இல்லை என்றால், நம்மை அழிக்க வேறு எதிரிகளே தேவையில்லை; நம்முடைய அகந்தையும், தவறான ரகசியங்களுமே நம்மை அழித்துவிடும். இந்த குறளில் வள்ளுவர் ‘சொல்பவர்’ என்றோ ‘அறிவுரை கூறுபவர்’ என்றோ மென்மையாகச் சொல்லவில்லை. ‘இடிப்பாரை’ என்கிறார். அதாவது, தவறு செய்யும்போது நம் சட்டையைப் பிடித்து உலுக்கி, இடித்து உரைக்கும் தைரியம் உள்ளவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
நமக்கென்று ஒருவரை நியமித்து, அவரிடம் நம் செயல்பாடுகளை ஒப்புவிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு நம்முடைய அகந்தை அவ்வளவு எளிதில் இடம் தராது. “நான் ஏன் இவரிடம் போய் என் கணக்குகளை, ரகசியங்களைச் சொல்ல வேண்டும்?” என்று நம் அகம் நம்மைத் தடுக்கும்.

வரலாற்றில் பேரரசர் அக்பர் எத்தனையோ போர்களில் வென்ற மாவீரர். ஆனால், அவர் தவறு செய்யும்போது தட்டிக்கேட்கவும், நல்வழிப்படுத்தவும் ‘பீர்பால்’ என்ற அறிஞர் அவரோடு இருந்தார். அக்பர் தன் வாழ்க்கையில் பீர்பாலை அனுமதித்ததால்தான் அவர் ‘மாமன்னர்’ என்று போற்றப்பட்டார். அந்த அகந்தையை உடைத்து, நமக்கு மேல் ஒரு நற்பண்புமிக்க அதிகாரத்தையோ அல்லது ஒரு நபரையோ நாம் அனுமதிக்கும் போதுதான் நம்முடைய ‘ஒழுக்கம்’ பாதுகாக்கப்படுகிறது.
சுயக்கட்டுப்பாடு மட்டும் ஒரு மனிதனைக் காப்பாற்றப் போதுமானது அல்ல. மனித மனம் எப்போது வேண்டுமானாலும், எந்தச் சூழ்நிலையிலும் தடுமாறலாம். பூட்டப்பட்ட வீட்டிற்குள்ளும் திருடன் புகுவது போல, நம் சிந்தனைக்குள்ளும் தீய எண்ணங்கள் நுழையலாம்.
எனவே, உங்களைத் தட்டிக் கேட்க, உங்களிடம் கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்குப் பிடித்த, நீங்கள் மதிக்கும் ஒரு நல்ல மனிதரிடம் இன்றே கொடுத்து வையுங்கள். அந்த “அன்பான வேலி” தான் உங்களை என்றென்றும் ஆபத்துகளில் இருந்தும், வீழ்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும் அரணாக விளங்கும்!
