தங்க காசு மோசடி வழக்கு:
குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டுமனைகள் தருவதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் ₹20 கோடிக்கும் மேலாக மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், பெண் காவல் ஆய்வாளர் தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கில் அவரது கணவருக்குப் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீஸார் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியுள்ளனர்.


ரூ.20 கோடி சுருட்டிய கும்பல்
மக்களிடமும், சக காவலர் குடும்பங்களிடமும் ஆசை வார்த்தைகளைக் கூறி, சுமார் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார்கள் குவியத் தொடங்கின. இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீஸார், கடந்த 9-ஆம் தேதி பிரபு மணி என்பவரைக் கைது செய்தனர்.
பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கைது செய்யப்பட்ட பிரபு மணியுடன் சேர்ந்து, இந்த பிரம்மாண்ட மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஷீலா மேரி என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கில் சேர்த்தனர்.
காவல்துறையின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக, ஆய்வாளர் ஷீலா மேரியைச் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் மனோகர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டார்.
போலீஸாருக்கு போக்கு காட்டி தலைமறைவு
வழக்கில் சேர்க்கப்பட்டதை அடுத்து, ஷீலா மேரியைக் கைது செய்யப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை என்பதும், வீட்டில் இருந்து மாயமாகித் தலைமறைவாகி விட்டதும் தெரியவந்தது. தற்போது போலீஸார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வளையத்திற்குள் வந்த கணவர்
இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஷீலா மேரியின் கணவரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண் காவல் ஆய்வாளரே சக போலீஸ் குடும்பங்களை ஏமாற்றி மோசடி வழக்கில் சிக்கித் தலைமறைவாகியுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
