சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்தும் தமிழ் மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநிலக் கல்லூரி தமிழ் மாணவர் மன்றத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும், CBSE பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் இந்தி மொழியை கட்டாயமாக்கும் முயற்சியாக மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வு தொடர்ந்து மாணவர்களின் உயிரைப் பலிகொள்கின்ற தேர்வாகவே இருந்து வருவதாக தெரிவித்தார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை மாணவர் போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், மாணவர்களின் கல்வி உரிமைகளை பாதிக்கும் கல்விக் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார். அதேபோல், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்தும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய இந்தத் திட்டத்தின் பெயரை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், இந்த முடிவு அரசியல் அச்சத்தின் வெளிப்பாடாக இருப்பதாகவும் விமர்சித்தார். மாணவர்களுக்கு பயனளிக்கும் திட்டங்களின் அடையாளத்தை மாற்றுவதற்குப் பதிலாக, அவற்றை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…
