“வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை; அந்தத் துறை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக இன்னும் 10 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பல்வேறு அரசியல் மற்றும் துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.
பா.ஜ.க-விற்குப் பதிலடி:
அரசின் செயல்பாடுகள் “சினிமா பாணியில்” உள்ளதாக பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறிய கருத்து குறித்துக் கேட்கப்பட்டபோது, “வானதி சீனிவாசன் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் என்னால் பதில் அளிக்க முடியாது. கருத்து தெரிவிப்பது வேறு, எதை வேண்டுமானாலும் கொச்சைப்படுத்திப் பேசுவது வேறு. சட்டமன்றத்தில் முதலமைச்சர் கூறிய கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது ஆளுங்கட்சித் தரப்பில் எந்த இடையூறும் ஏற்படுத்தப்படவில்லை. முதலமைச்சர் பேச வேண்டும் என்று கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தவர்கள், அவர் பேசத் தொடங்கியதும் ஏன் வெளியேறினர்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எத்தகைய கேள்விகளையும் எழுப்புவார்கள். இந்த அரசு மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே முதலமைச்சர் விஜய்யின் ஒரே நோக்கம் ஆகும்” என்றார்.
மாற்று இடம் வழங்கும் திட்டம்:
மந்தை புறம்போக்கு உள்ளிட்ட பல்வேறு வகை நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் திட்டங்கள் தயாராகி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களும் புதிய அரசால் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
விமான நிலைய விரிவாக்கப் பணிகள்:
கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்துப் பேசிய அவர், “நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக இன்னும் 10 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதேபோல், சேலம் விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை” என்று விளக்கமளித்தார்.
ஆதாரத்தை வெளியிடுவேன் – நயினார் நாகேந்திரனுக்கு எச்சரிக்கை:
பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய மருத்துவக் கல்லூரி விண்ணப்ப விவகாரம் மற்றும் அவரது ராஜினாமா சவால் குறித்துக் கேட்கப்பட்டபோது, “நயினார் நாகேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்தக் கட்சியில் பதவி என்பது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். ஆனால், நான் தற்போது பொறுப்புள்ள அமைச்சராக இருக்கிறேன். அவர் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் கொடுத்தாரா, இல்லையா என்பதற்கான முழுமையான ஆதாரம் என்னிடம் கைவசம் உள்ளது. அடுத்த செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆதாரத்தை நான் ஊடகங்களிடம் நேரடியாகக் காட்டுவேன்” என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
