கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலைக் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை, ஆடு மேய்க்கச் சென்ற முதியவரைத் தாக்கி, கொடூரமான முறையில் அடித்துக் கொன்று தின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.


மர்மமான முறையில் காணாமல் போன முதியவர்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட மூணுகுட்டை மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் நேற்று காலை தனது ஆடுகளுக்குத் தீவனமாக இலை, தழைகளைச் சேகரிப்பதற்காகக் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அவரைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
புதருக்குள் சிதைந்த நிலையில் உடல் மீட்பு:
தேடுதல் வேட்டையின் போது, வனப்பகுதியில் உள்ள புதருக்குள் வெள்ளியங்கிரி கொடூரமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும், உடலின் பல்வேறு பாகங்களில் இருந்த மாமிசங்களை வனவிலங்கு கடித்துக் குதறித் தின்ற நிலையிலும் சிதைந்து காணப்பட்டது.
இது குறித்து உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கும் காரமடை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், வெள்ளியங்கிரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்:
இக்கோரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மேலும், முதியவரின் உடல் கிடந்த இடத்தின் அருகே சிறுத்தையின் கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், சிறுத்தைதான் அவரை வேட்டையாடி உடலைச் சாப்பிட்டிருக்க வேண்டும் என வனத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
கிராம மக்கள் கோரிக்கை:
சம்பவம் நடந்த இடம் மூணுகுட்டை மலைக் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளதால், மனிதர்களை வேட்டையாடப் பழகிய அந்தச் சிறுத்தை மீண்டும் கிராமத்திற்குள் புகுந்து மற்றவர்களையும் தாக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
எனவே, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இப்பகுதியில் உரிய கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிந்து கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனவும், கிராம மக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மூணுகுட்டை கிராம மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
