
குரூப்-1 தேர்வில் முறைகேடு செய்து அரசுப்பணி பெற்ற 3 அதிகாரிகளின் சஸ்பெண்ட் ரத்து செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இவ்வழக்கின் முழுமையான விவரங்கள் :

முறைகேடு புகாரில் சிக்கிய டிஎஸ்பி, உதவி ஆட்சியர்கள் :
கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 (TNPSC Group 1) தேர்வில், தமிழ் வழியில் பயின்றதற்கான (PSTM) போலி சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, கலைவாணி, திருநங்கை சொப்னா மற்றும் சதீஷ்குமார் ஆகிய மூவரும் முறைகேடாக உதவி ஆட்சியராகவும், உதவி காவல் துறை கண்காணிப்பாளராகவும் (DSP) பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் மூவரும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% முன்னுரிமை இடஒதுக்கீட்டின் (PSTM Quota) கீழ் பணி நியமனம் பெற்றனர்.
ஆனால், இவர்கள் சமர்ப்பித்த தமிழ் வழிச் சான்றிதழ்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவையும், இவர்களது சான்றிதழ்கள் உண்மையானவை அல்ல என மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கையையும் ரத்து செய்யக் கோரி மூவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை தனி நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து வந்த நிலையில், அவர் பிறப்பித்த தீர்ப்பு விவரங்கள் பின்வருமாறு : பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழியில் பயின்று 20% முன்னுரிமை அடிப்படையில் சிலர் குரூப்-1 பணியில் சேர்ந்ததாகப் பெரிய அளவில் முறைகேடு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) விசாரணை நடத்தி, விளக்கம் கேட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பினர். பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்த மனுதாரர்கள் பெற்றிருந்த பட்டங்கள் செல்லுபடியாகாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒரே வருடத்தில் அத்தனை பாடங்களும் பாஸ்!
மனுதாரர்கள் வெவ்வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தாலும், அவர்கள் அனைவரும் தொலைதூரக் கல்வி இயக்குனரகம் (Distance Education) மூலம் வெவ்வேறு படிப்பு மையங்கள் வழியாகவே பட்டம் பெற்றுள்ளனர். ஆனால், மனுதாரர்கள் விண்ணப்பித்த மையத்திற்கும், அவர்களுக்குச் சேர்க்கை வழங்கப்பட்ட மையத்திற்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் உள்ளன.
மிக முக்கியமாக, மனுதாரர்கள் அனைவரும் தங்கள் பட்டப்படிப்புக்கான அத்தனை பாடங்களையும் (All Papers), இறுதி ஆண்டு படிப்பின் போது ஒரே அமர்வில் (Single Sitting) எழுதித் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவை அனைத்தும் இவர்களது பட்டங்களின் அடிப்படையையே ஒட்டுமொத்தமாகச் சந்தேகத்திற்கு உள்ளாக்கும் வகையில், ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக உள்ளன.
மோசடி மூலம் அரசுப் பணி பெற முடியாது!
அரசுப் பணியில் அமர்ந்து மக்கள் கடமையை நிறைவேற்றுவதற்கு நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவை மிக மிக அவசியம். அரசு பணி நியமனங்கள் அனைத்தும் தகுதி மற்றும் சட்டத்திற்கு இணங்க மட்டுமே வழங்கப்படுகின்றன; மாறாக மோசடி அல்லது சூழ்ச்சி மூலம் அல்ல என்ற பொதுமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் மீதே ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இயங்கி வருகிறது.”
இடைக்கால உத்தரவுகள் ரத்து!
மேற்கண்ட காரணங்களைக் குறிப்பிட்ட நீதிபதி புகழேந்தி, மூன்று அதிகாரிகளின் மனுக்களையும் முற்றிலும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் இவர்களுக்குச் சாதகமாக முன்னதாக வழங்கப்பட்டிருந்த அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் ரத்து செய்து வழக்கை முடித்து வைத்தார்.
