இசைஞானி இளையராஜா மற்றும் சரிகம (Saregama) நிறுவனம் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வரும் காப்புரிமைப் போராட்டத்தில், இளையராஜாவுக்கு மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சரிகம நிறுவனத்தின் வசம் உள்ள 134 திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்துவதற்கும், உரிமை கோருவதற்கும் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வழக்கின் பின்னணி:
1976 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி, சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அந்தத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, உலகளாவிய மற்றும் நிரந்தரமான காப்புரிமையைத் தாங்கள் பெற்றுள்ளதாகச் சரிகம தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது.

மேலும், இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி அமேசான் மியூசிக் (Amazon Music), ஐ-டியூன்ஸ் (iTunes), ஜியோசாவன் (JioSaavn) போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என்றும் குற்றம் சாட்டியது. 1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி, ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்குத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்பதைச் சரிகம தரப்பு வழக்கறிஞர் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, சரிகம நிறுவனத்தின் வாதங்களை ஏற்றுக்கொண்டு, இளையராஜா மற்றும் அவர் சார்ந்த பிரதிநிதிகள் அந்த 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என்று இடைக்காலத் தடை விதித்தார்.
“இந்தத் தடை உத்தரவை நீக்கினால், சரிகம நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்” என்று குறிப்பிட்ட நீதிபதி, தற்போதைய நிலையில் தடையை நீக்க முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளார். இதன் மூலம் அந்த 134 பாடல்களின் மீதான காப்புரிமை விவகாரத்தில் சரிகம நிறுவனமே தற்போதைக்குத் தற்காலிக வெற்றி பெற்றுள்ளது.
