போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.


உதவியாளர் கைது பின்னணி:
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பண மோசடி செய்த புகாரில், முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் எனக் கூறப்படும் அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 24-ஆம் தேதி கைது செய்தனர். பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்தப் புகாரில், இந்த மோசடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையிலும் (FIR) சிவசங்கர் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதன் தொடர்ச்சியாக, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
வீடியோ பதிவோடு விசாரணை:
சம்மனை ஏற்று, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நேற்று காலை சரியாக 10 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஞானசித்ரா தலைமையிலான போலீசார் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை முழுவதும் முழுமையாக வீடியோ பதிவு (Video Graph) செய்யப்பட்டது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியனை வரும் 6-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணை மற்றும் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், புகார்தாரர் சமர்ப்பித்த ஆவணங்களை முன்வைத்து முன்னாள் அமைச்சரிடம் போலீசார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
தொடர்பு இருந்தால் நடவடிக்கை:
“இளஞ்செழியன் அளித்த வாக்குமூலம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவில் இந்த மோசடியில் முன்னாள் அமைச்சருக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்குப் பின் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”போலீசாரின் விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியனுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவர் பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நான் அவரிடம் தொலைபேசியில் பேசியதாக இளஞ்செழியன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தேவைப்பட்டால் எனது குரல் மாதிரி சோதனைக்கு (Voice Test) நான் தயாராக இருக்கிறேன் என்பதை போலீசாரிடம் தெரிவித்துவிட்டேன். யாரிடமும் பணம் வாங்கவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு பழிவாங்கவே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
