Homeசெய்திகள்சினிமா​ரூ. 1.80 கோடி வாடகை மோசடி: நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் மீது ஐதராபாத்தில் வழக்குப்பதிவு!

​ரூ. 1.80 கோடி வாடகை மோசடி: நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் மீது ஐதராபாத்தில் வழக்குப்பதிவு!

-

- Advertisement -

‘ஆனந்தன் காடு’ திரைப்படப் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட அதிநவீன கேமராக்கள் மற்றும் உபகரணங்களுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் மோசடி செய்ததாகவும், பணத்தைக் கேட்கச் சென்ற ஊழியரை மிரட்டியதாகவும் நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் வினோத் உள்ளிட்டோர் மீது தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாடகை

ஒப்பந்தமும் விநியோகமும்
​தாஹேர் சினி டெக்னிக் (Taher Cine Technic) நிறுவனத்தைச் சேர்ந்த கணக்காளர் ஜாவித் அலி கொடுத்துள்ள புகாரின் விபரம் வருமாறு:
​’ஆனந்தன் காடு’ திரைப்படத் தயாரிப்பின் போது, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் வினோத் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஐதராபாத்தில் உள்ள தாஹேர் சினி டெக்னிக் நிறுவனத்தை அணுகியுள்ளனர்.

we-r-hiring

படப்பிடிப்பிற்காக அதிநவீன டிஜிட்டல் கேமராக்கள், லைட்டிங் யூனிட்கள் உள்ளிட்ட இதரப் பொருட்களை வாடகைக்குப் பெறுவதற்காக, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். மொத்த வாடகையையும் ஒரே தவணையாகச் செலுத்துவதாக அவர்கள் உறுதியளித்திருந்தனர். ​இதையடுத்து, தாஹேர் சினி டெக்னிக் நிறுவனம் தனது சொந்தச் செலவிலேயே அந்த மதிப்புமிக்க உபகரணங்களை ஐதராபாத்தில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு சென்று சேர்த்தது. படம் முழுமையாக முடியும் வரை அந்தப் பொருட்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டன.

​ரூ. 1.80 கோடி நிலுவைத் தொகையும் ஏமாற்றுதலும்
​திரைப்படம் முழுமையாக முடிவடைந்த நிலையிலும், ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய மொத்த வாடகைத் தொகையான ரூ. 2.12 கோடியில், ரூ. 1.80 கோடிக்கும் அதிகமான தொகையைத் தயாரிப்புத் தரப்பு செலுத்தவில்லை.

​நிலுவைத் தொகை இருப்பதை எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், படம் வெளியாவதற்குள் முழுத் தொகையையும் செலுத்தி ‘நிலுவையில்லை’ (No Dues) சான்றிதழ் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தது. ஆனால், அவர்கள் சொன்னபடி பணத்தைச் செலுத்தவில்லை. பல்வேறு வழிகளில் நிறுவனத் தரப்பில் இருந்து அணுகியபோதும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. மேலும், கேரள நீதிமன்றத்தை அணுகிப் பல உண்மைகளை மறைத்து ஓர் இடைக்கால உத்தரவையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

கொலை மிரட்டல் மற்றும் போலீஸ் வழக்கு
​இந்நிலையில், நிலுவையில் உள்ள வாடகைத் தொகையைக் கேட்பதற்காகத் தாஹேர் சினி டெக்னிக் நிறுவனத்தின் கணக்காளர் ஜாவித் அலி நேரில் சென்றுள்ளார். அப்போது, படத்தின் தயாரிப்பாளர் வினோத், கதாநாயகனான நடிகர் ஆர்யா மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் கிஷோர் ஆகிய மூவரும் தன்னைத் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஜாவித் அலி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலைய போலீசார் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் வினோத், உதவியாளர் கிஷோர் ஆகியோர் மீது மோசடி, நம்பிக்கை துரோகம் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ