
நடிகர் அதர்வா நடிப்பில் இன்று (ஜூலை 10, 2026) திரையரங்குகளில் வெளியாகவிருந்த ‘இதயம் முரளி’ (Idhayam Murali) திரைப்படத்தின் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது.
வழக்கின் பின்னணி என்ன?
முன்னணி இயக்குநர் சுதா கொங்காரா (Sudha Kongara), ‘டான் பிக்சர்ஸ்’ (Dawn Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை இயக்குவதற்காக அவருக்கு ஜிஎஸ்டி மற்றும் லாபப் பங்குடன் சேர்த்து மொத்தம் ரூ.15 கோடி சம்பளமாகப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தயாரிப்பு தரப்பு இதுவரை 6.71 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.8.39 கோடி சம்பளப் பாக்கியை இன்னும் வழங்கவில்லை என்றும் இயக்குநர் சுதா கொங்காரா மற்றும் அவரது நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.


‘இதயம் முரளி’ படத்திற்குத் தடை கோரிய சுதா கொங்காரா :
இதுதொடர்பாக சுதா கொங்காரா தாக்கல் செய்த மனுவில், “பராசக்தி திரைப்படத்தின் அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் ஓடிடி (OTT) உரிமைகள் அனைத்தும் முறைப்படி மாற்றப்பட்டு விட்ட நிலையிலும், ஒப்பந்தப்படி எனக்கு வழங்க வேண்டிய சம்பளப் பாக்கி முழுமையாகத் தரப்படவில்லை. தயாரிப்பு நிறுவனத்திடம் பிணையமாகப் பெறக்கூடிய உறுதியான சொத்துகள் ஏதுமில்லை. எனவே, எனது சம்பள பாக்கியான ரூ.8.39 கோடியை 12% வட்டியுடன் பெற்றுத் தர வேண்டும். அதுவரை, அதே டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படமான அதர்வாவின் ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு (Justice K. Kumaresh Babu) முன்னிலையில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதி, ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் தியேட்டர் வெளியீட்டை நிறுத்தவோ அல்லது படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கவோ முற்றிலும் மறுத்துவிட்டார்.

தடை விதிக்க மறுப்பு : மேலும், இன்று (ஜூலை 10) வெளியாகவிருந்த ‘இதயம் முரளி’ திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகலாம்; அதற்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
மத்தியஸ்தர் நியமனம்: இயக்குநர் சுதா கொங்காரா மற்றும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே உள்ள பணப் பரிவர்த்தனை மற்றும் ஒப்பந்தப் பிரச்சினையைச் சட்டப்பூர்வமாகத் தீர்க்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் ( என்பவரை மத்தியஸ்தராக (Arbitrator) நியமிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
பிரச்சனைக்கு தீர்வு: இருதரப்பினரும் இந்த மத்தியஸ்தர் மூலமாகத் தங்களது கருத்து வேறுபாடுகள் மற்றும் சம்பளப் பாக்கிப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமூகமாகத் திரைக்கு வரும் ‘இதயம் முரளி’ :
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம், ரிலீஸ் தேதியான இன்றே ‘இதயம் முரளி’ திரைப்படம் எவ்விதச் சட்டச் சிக்கல்களும் இன்றித் திரையரங்குகளில் வெளியாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
