இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் பேரனும், நடிகர் தனுஷின் சகோதரி மகனுமான பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. தாத்தா (கஸ்தூரி ராஜா), மகன் (செல்வராகவன்), பேரன் (பவிஷ்) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் ஒரே மேடையில் அமர்ந்திருந்த இந்த விழா, பல்வேறு நெகிழ்ச்சியான மற்றும் சுவாரசியமான சினிமா நினைவுகளின் பகிர்வாக அமைந்தது.
6 படம் வரை அழுதுகொண்டே நடித்த தனுஷ்: கஸ்தூரி ராஜா நெகிழ்ச்சி
விழாவில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய இயக்குநர் கஸ்தூரி ராஜா, தன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்த ஆரம்பகாலக் கட்டங்களை நினைவுகூர்ந்தார். ”என் வாழ்வில் எத்தனையோ விழாக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்றைய மேடை எனக்கு மிகவும் ஸ்பெஷல். என் மகன் செல்வராகவன், என் பேரன் பவிஷ் ஆகியோருடன் ஒரே மேடையில் நான் அமர்ந்திருக்கிறேன். நாங்கள் இந்த இடத்திற்கு வர பட்ட கஷ்டங்களும், இழந்த இழப்புகளும் ஏராளம்.” ”எங்கள் குடும்பத்தில் செல்வராகவன் மட்டும்தான் சினிமாவைப் விரும்பி வந்தான். தனுஷுக்கு ஆரம்பத்தில் சினிமாவே பிடிக்காது. ஐந்து, ஆறு படங்கள் நடிக்கும் வரை, ‘என்னை விட்ருங்கப்பா நான் போயிடுறேன்’ என்றுதான் சொல்வான். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் அழுதுகொண்டேதான் நடிப்பான். ஆனால், இன்று அவன் உழைப்பால் அடைந்துள்ள உயரம் பெருமைக்குரியது” எனப் பகிர்ந்துகொண்டார்.

செல்வராகவனைச் சினிமாவுக்கு அனுப்பிய சுவாரசிய பின்னணி
”என் பிள்ளைகள் யாரும் சினிமாவுக்கு வரக்கூடாது என்பதில் நான் கண்டிப்புடன் இருந்தேன். செல்வராகவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வருவதாகக் கூறியபோது, டிகிரி முடித்துவிட்டு வந்தால் சேர்த்துவிடுகிறேன் என்று பொய் சொல்லி அவனைப் படிக்க வைத்தேன். அதன்பின், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் சேர்க்கக் கேட்டபோது, ‘உன் மகனை என்னால் திட்ட முடியாது’ என மறுத்துவிட்டார். பிறகு இயக்குநர் பாலசந்தரிடம் அனுப்பி, சினிமா வேண்டாம் என்று அட்வைஸ் பண்ணி அனுப்புங்கள் எனக் கூறினேன். ஆனால் அவரோ, ‘இவனிடம் ஒரு நெருப்பு இருக்கிறது, நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார். கடைசியில் நாங்களே கடன் வாங்கித்தான் ‘காதல் கொண்டேன்’ படத்தை எடுத்தோம்.”

அசிஸ்டென்ட் டைரக்டர் டு ஹீரோ – பேரன் பவிஷ்
தன் பேரன் பவிஷ் குறித்துப் பேசிய கஸ்தூரி ராஜா, “அவன் விஸ்காம் படித்துவிட்டு டைரக்ஷன் செய்யப்போவதாகக் கூறினான். தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை செய்தான். அப்போது தனுஷ் என்னிடம், ‘அப்பா, பையன் பிரமாதமா ஒர்க் பண்றான், நல்லா வந்துருவான்’ என்று பாராட்டினான். இன்று தனுஷே அவனை ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடிக்க வைத்து இந்த மேடையில் உட்கார வைத்துள்ளான்” என்று நெகிழ்ந்தார்.
தனுஷின் அரசியல் வருகை குறித்து கஸ்தூரி ராஜா பதில்
சமீபத்தில் தனுஷ் கொடியை அறிமுகப்படுத்தியதாக வந்த செய்தி மற்றும் அவரது அரசியல் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் கொடியை அறிமுகப்படுத்தியது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது ‘லவ் ஓ லவ்’ திரைப்பட விழா, அதைப்பற்றி கேளுங்கள்” என்று நயமாகத் தவிர்த்தார்.
“GenZ காதல் மீது நம்பிக்கையில்லை” – இயக்குநர் செல்வராகவன் தத்துவம்!
மேடையில் பேசிய இயக்குநர் செல்வராகவன், காதலைப் பற்றிய தனது பாணியிலான தத்துவத்தைப் பகிர்ந்துகொண்டார், “இப்போது உள்ள GenZ காதல் குறித்து எனக்கு நம்பிக்கையில்லை. இப்போதைய காதல் எப்படி இருக்கிறது என்று நான் தெரிந்துகொள்ள முதலில் நான் காதலிக்கணும், அதன் பிறகுதான் சொல்ல முடியும். ஆனால், அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப காதலின் பெயர் (Term) தான் மாறுமே தவிர, காதல் என்பது எப்போதுமே நிரந்தரமானது.” GenZ தலைமுறையினருக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஒரு படம் இயக்கி வருவதாகவும், அதன் 80 சதவீதப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் பவிஷை அடித்தீர்களா என்ற கேள்விக்கு, “வேண்டுமென்றேதான் அடித்தேன், கதைக்குத் தேவைப்பட்டது என்பதால் அப்போது கூட வலிக்காத மாதிரிதான் அடித்தேன். ஆனால் அதை பெரிதாக்கிவிட்டார்கள். தனுசும், பவிஷும் கடுமையான உழைப்பாளிகள்” என்றார்.
மேடையில் கண்கலங்கிய வனிதா விஜயகுமார்!
விழாவில் கதாநாயகன் பவிஷ் பேசுகையில், “நான் நன்றாக நடிக்கிறேன் என்று என்னுடைய தாத்தாவும் மாமாவும் சொல்வது மகிழ்ச்சி. நடிகை வனிதா அவர்கள் சிறந்த அனுபவசாலி. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் ‘யங்’ ஆக (Young) இருப்பார். இந்தப் படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்தைக் கூட அவரே பண்ணியிருக்கலாம், கரெக்ட்டாக இருந்திருக்கும்” என்று பாராட்டினார். பவிஷ் பேசப் பேச மேடையில் அமர்ந்திருந்த வனிதா விஜயகுமார் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கினார். திடீரென மேடைக்கு வந்த வனிதா, “பவிஷ் என்னோட பையன் மாதிரி, அவன் நன்றாக வரவேண்டிய பையன்; அனைவரும் அவனுக்கு ஆதரவு தாருங்கள்” என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
