இந்திய விண்வெளித்துறையில் புதிய மைல்கல்லாக, தனியார் பங்களிப்போடு உருவான ‘விக்ரம்-1’ ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் நாராயணன், இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் குமார் கோயங்கா மற்றும் ஸ்கைரூட் நிறுவனர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். செய்தியாளர்கள் சந்திப்பில் விவரிக்கப்பட்ட முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:


இஸ்ரோ வரலாற்றில் முக்கிய நாள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்:
“இன்றைய நாள் இஸ்ரோ வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும். வெறும் 8 ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட்-அப் (Start-up) நிறுவனம், இன்று ஒரு செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் விண்கலனை வெற்றிகரமாக வடிவமைத்துச் சாதித்துக் காட்டியுள்ளது. முழுவதும் இளைஞர்களைக் கொண்ட ஒரு குழு இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது” என்று பாராட்டிய இஸ்ரோ தலைவர், இந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 7 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் மற்றொரு ஏவுதல் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது எப்படி?
ராக்கெட் ஏவுதல் தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் குமார் கோயங்கா மற்றும் ஸ்கைரூட் நிறுவனர் பரத் ஆகியோர் விளக்கமளித்தனர். “ராக்கெட் ஏவப்படுவதற்கான ஆட்டோமேட்டிக் லாஞ்ச் சீகுவன்ஸில் (Automatic Launch Sequence) சிறிய கோளாறு ஏற்பட்டது. இது ராக்கெட்டின் குறைபாடு அல்ல, சாப்ட்வேரில் (Software) ஏற்பட்ட சிறிய கோளாறு மட்டுமே. அது உடனடியாகக் கண்டறியப்பட்டு, மிக விரைவாகச் சரிசெய்யப்பட்ட பின்னரே ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. முதல் லாஞ்சிலேயே செயற்கைக்கோளைச் சுற்றுவட்டப் பாதைக்கு மிக அருகில் வெற்றிகரமாக நிறுத்திச் சாதித்துள்ளோம்” என்றனர்.
இளைஞர்களின் சாதனை மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் இலக்கு:
ஸ்கைரூட் நிறுவனர் பவன்குமார் சந்தானா பேசுகையில், “எங்கள் நிறுவன ஊழியர்களின் சராசரி வயது 28 மட்டுமே. இந்த இளம் வயதினர் ராக்கெட், செயற்கைக்கோள், ஆர்பிட்டல் வெஹிக்கிள் (Orbital Vehicle) ஆகிய மூன்றையும் வெற்றிகரமாக வடிவமைத்து விண்ணில் செலுத்தியுள்ளனர். ராக்கெட் சயின்ஸ் என்பதை உணர்வுபூர்வமாக இப்போதுதான் உணர்கிறோம். திட்டமிட்டதை விட இரண்டு மடங்கு நேரமும், இரண்டு மடங்கு செலவும் எடுத்தாலும், துல்லியமாகச் சாதித்துக் காட்டியுள்ளோம்.
உலக அளவில் ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ (SpaceX) நிறுவனம் பல ஸ்டார்ட்-அப்களுக்கு ஊக்கமாக உள்ளது, நாங்களும் அந்த அளவுக்கு வளர வேண்டும் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்” என்றார். அடுத்த ஏவுதல் எப்போது என்ற கேள்விக்கு, “இது 20-20 போட்டி கிடையாது, டெஸ்ட் மேட்ச் போன்றது; நீண்ட திட்டமிடல் தேவைப்படும். இன்-ஸ்பேஸ் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து அடுத்த ஏவுதல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று ஸ்கைரூட் பரத் தெரிவித்தார்.
குலசேகரப்பட்டினம் ஏவுதளம் மார்ச் மாதம் திறப்பு: இஸ்ரோ தலைவர் நாராயணன் பிரத்யேக பேட்டி!
விக்ரம்-1 ராக்கெட் வெற்றியைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் நாராயணன் நமது செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக (One-to-One) பேட்டியில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “விண்வெளி ஆய்வில் இந்தியாவின் அடுத்த கட்ட உள்கட்டமைப்பு வசதியாக உருவாக்கப்பட்டு வரும் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் அனைத்தும் வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிவடைந்து, அது மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
மேலும், இந்த நிதியாண்டில் திட்டமிடப்பட்டுள்ள 7 லான்ச்களில், அடுத்த ஏவுதல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறும் என்றும் அவர் தனது பிரத்யேக பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
