தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வான்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து நாட்கணக்கில் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சோனம் வான்சுக்கின் உடல் எடை 9 கிலோ வரை குறைந்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று போராட்டத்தில் பங்கேற்ற பலரும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு
தொடர் உண்ணாவிரதத்தால் சோனம் வான்சுக்கின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள சூழலில், அவரது உயிரைக் காப்பாற்ற அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்
”சமூக ஆர்வலர் சோனம் வான்சுக்கின் உடல்நிலை மற்றும் மருத்துவ நிலையை அரசு மருத்துவர்கள் தினசரி நேரில் சென்று கண்காணிக்க வேண்டும். அவரது உயிரைப் பாதுகாப்பதற்கான அனைத்து அவசர மருத்துவ முயற்சிகளும் தடையின்றி மேற்கொள்ளப்படுவதை மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் உடனடியாக உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் வலுத்து வரும் நிலையில், சோனம் வான்சுக்கின் உடல்நிலை குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
