உலக அளவில் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த விமானப்படைகளைக் கொண்ட நாடுகளின் 2026-ஆம் ஆண்டுக்கான புதிய பட்டியலை ‘டபுள்யூ.டி.எம்.எம்.ஏ.’ (WDMMA) அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய விமானப்படை தொடர்ந்து 5-வது ஆண்டாக 3-வது இடத்தைப்பிடித்து சாதனை படைத்துள்ளது.


ஆய்வு செய்யப்பட்டது எப்படி?
உலகெங்கிலும் உள்ள 103 நாடுகளைச் சேர்ந்த 129 வான்வழிச் சேவைகள் மற்றும் 48,000-க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. விமானப் படையின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் அவற்றின் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
டாப் 3 நாடுகள் மற்றும் அண்டை நாடுகளின் நிலை:
இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தையும், ரஷ்யா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இவர்களைத் தொடர்ந்து இந்திய விமானப்படை 3-வது இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 7-வது இடத்திலும், பாகிஸ்தான் 18-வது இடத்திலும் உள்ளன.
சீனாவை முறியடித்த இந்தியாவின் தொழில்நுட்பம்:
இந்திய விமானப்படையிடம் தற்போது 542 போர் மற்றும் தாக்குதல் விமானங்கள் உட்பட மொத்தம் 1,716 விமானங்கள் உள்ளன. எண்ணிக்கை அடிப்படையில் சீனா 3,733 விமானங்களுடன் பெரிய படையைக் கொண்டிருந்தாலும், தரவரிசையில் இந்தியாவிற்கு பின்னாடியே உள்ளது. விமானங்களின் தரம், நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் திறனில் சீனாவை விட இந்தியாவே மிக பலம் வாய்ந்த படையாகத் திகழ்கிறது என்பதை இந்த பட்டியல் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படையின் பலம் (ஒரு பார்வை):
மொத்த விமானங்கள்: 1,716
போர் மற்றும் தாக்குதல் விமானங்கள்: 542
ஹெலிகாப்டர்கள்: 498 (இதில் 222 எம்ஐ-17 ஹெலிகாப்டர்களும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 111 ஹெச்ஏஎல் துருவ் மற்றும் ருத்ரா ஹெலிகாப்டர்களும் அடங்கும்).
போக்குவரத்து விமானங்கள்: 282
பயிற்சி விமானங்கள்: 374
சிறப்புப் பணி விமானங்கள்: 20 (வான்வழித் தாக்குதலை முன்கூட்டியே எச்சரிக்கும் ஏவாக்ஸ் (AEW&C) அமைப்புகள், உளவுத் தகவல் சேகரிக்கும் தளங்கள் மற்றும் வான்வழியாகவே எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டவை).
எண்ணிக்கையைத் தாண்டி, தரத்திலும் நவீன தொழில்நுட்பத்திலும் இந்திய விமானப்படை உலக அரங்கில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருவது இந்திய ராணுவத்தின் அசாத்திய வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ளது.
