விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச் சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வர இந்தியத் தூதரகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.


சென்னை மாதவரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (46), லாவா (Lava) மொபைல் நிறுவனத்தின் சென்னை விநியோகஸ்தராக (Distributor) பணியாற்றி வந்தார். இந்நிறுவனத்தில் நிர்ணயிக்கப்படும் விற்பனை இலக்கை (Target) வெற்றிகரமாக நிறைவேற்றும் ஊழியர்களை நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இத்தகைய சுற்றுலா வாய்ப்புகள் கிடைத்தும் சந்தோஷ் குமார் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், இந்த ஆண்டு நிறுவனத்தின் வற்புறுத்தலின் பேரில், சக ஊழியர்களுடன் மகிழ்ச்சியாக கடந்த வாரம் வியட்நாமுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். ஆனால், அந்த மகிழ்ச்சிப் பயணம் சென்னை மாதவரத்தில் உள்ள அவரது குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பெரும் சோகமாக மாறியுள்ளது.
மோசமான வானிலையால் கவிழ்ந்த படகு
வியட்நாமின் புகழ்பெற்ற ‘ஃபு குவோக்’ (Phu Quoc) தீவு அருகே இந்தியச் சுற்றுலாப் பயணிகள் கடலில் படகு சவாரி சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வானிலை மோசமடைந்தது. பலத்த காற்று மற்றும் அலைகளின் சீற்றத்தால் நிலைதடுமாறிய படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த அதிர்ச்சி விபத்தில் படகில் இருந்த 15 இந்தியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியான தமிழர்களின் பட்டியலில் சென்னை மாதவரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பாபு ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
“டார்கெட் அச்சீவ் செய்ததால் சென்றார்” – உறவினர்கள் வேதனை
சந்தோஷ் குமாரின் மரணச் செய்தி கேட்டு அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் வேதனையுடன் கூறுகையில்:
”நிறுவனத்தின் விற்பனை இலக்கை (Target) வெற்றிகரமாக முடித்ததற்காகத்தான் இந்த டூர் சென்றார். கம்பெனி சார்பில் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்குச் சென்றவர் இப்படிப் பிணமாகத்தான் திரும்புவார் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. தகவல் தெரிந்ததில் இருந்து குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது” எனத் தெரிவித்தனர்.
தற்போது தமிழக அரசும், இந்தியத் தூதரகமும் தங்களைத் தொடர்ந்து தொடர்புகொண்டு தேவையான உதவிகளைச் செய்து வருவதாகவும், சந்தோஷ் குமாரின் உடல் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை கொண்டு வரப்படும் என்றும் அதிகாரிகள் தங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியத் தூதரகம் அறிக்கை
இவ்விபத்து குறித்து வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்:
விபத்தில் உயிர் தப்பிய 15 பேர் முதலுதவி மற்றும் சிகிச்சைக்குப் பின் இந்தியா திரும்பி வருகின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த இருவரில் ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் ஃபு குவோக் நகரில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்களையும் சட்டப்பூர்வ நடைமுறைகளுக்குப் பின் விரைவாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியத் தூதரகம் மற்றும் துணைத் தூதரக அதிகாரிகள் ஒருங்கிணைந்து செய்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
