கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் விக்கிரவாண்டியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


குளியலறையில் மீட்கப்பட்ட சடலம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த தர்ணிகா (19) என்ற மாணவி, கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த அவர், நேற்று முன்தினம் காலை குளிக்கச் சென்றுள்ளார். மதிய இடைவேளை ஆகியும் அவர் வகுப்பிற்கு வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகள், விடுதிக்குச் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது குளியலறை கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்துப் பார்த்தபோது தர்ணிகா உள்ளே பக்கெட்டில் தலை கவிழ்ந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோரின் பரபரப்பு குற்றச்சாட்டு:
மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். தர்ணிகாவிற்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுவதை முற்றிலும் மறுத்துள்ள அவர்கள், பிரேத பரிசோதனைக் கூடத்தில் உடலைப் பார்த்தபோது உதடு வீங்கியும், கன்னத்தில் கருப்பு வடுக்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், காலையில் குளிக்கச் சென்ற மகள் மதியம் 1:30 மணி வரை வராத நிலையிலும் விடுதி நிர்வாகம் ஏன் கவனிக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். விடுதியில் நடந்த ஏதோ ஒரு தவறை மறைக்க முயல்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் மறியல்:
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்கவும், விடுதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விக்கிரவாண்டியில் திரண்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்று, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
