வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இனி புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கும் போது, தங்களது பெற்றோரின் எஸ்ஐஆர் (SIR – Special Intensive Revision) விவரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் 3-வது கட்டப் பணிகள்:
தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக பீகாரிலும், இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களிலும் இப்பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது 3-வது கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
படிவம் 6-ல் புதிய உறுதிமொழிப் பிரிவு:
இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க (Form 6) விண்ணப்பிப்பவர்களுக்காக ஒரு புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் படிவம் 6-ல், பகுதி ‘ஜெ’ (J) மற்றும் ‘கே’ (K) ஆகிய பிரிவுகளுக்கு இடையில் ஒரு புதிய “உறுதிமொழி பிரிவு” (Declaration Section) சேர்க்கப்பட்டுள்ளது.
இது ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைனில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்யும் போது, புதிய உறுதிமொழிப் பிரிவில் பெற்றோரின் எஸ்ஐஆர் (SIR) விவரங்கள் கேட்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது பெற்றோரின் முந்தைய வாக்காளர் பட்டியல் விவரங்களை (தொகுதி எண், வாக்குச்சாவடி எண், வரிசை எண் போன்றவை) இதில் குறிப்பிட வேண்டும்.
ஒருவேளை பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்கள் இல்லை என்றால், “அத்தகைய விவரங்கள் இல்லை” (No SIR details) என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.
இந்த உறுதிமொழிப் பகுதியை முழுமையாகப் பூர்த்தி செய்யாமல், ஆன்லைன் படிவத்தில் அடுத்த கட்டத்திற்கு (Next Step) செல்ல முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
நோக்கம் என்ன?
வாக்காளர்களை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து வரைபடமாக்குவதற்கும் (Mapping Electors), புதிய வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் இந்த புதிய ஆன்லைன் நடைமுறை பெரிதும் உதவும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
