Homeசெய்திகள்இந்தியாE20 பெட்ரோல் வேண்டாமா?? 100% தூய பெட்ரோலை வாங்க அதிக விலை கொடுக்கனும்” - ஒன்றிய...

E20 பெட்ரோல் வேண்டாமா?? 100% தூய பெட்ரோலை வாங்க அதிக விலை கொடுக்கனும்” – ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி..

-

- Advertisement -

E20 பெட்ரோல் - நிதின் கட்கரி100% தூய பெட்ரோல் வாங்க வேண்டுமென்றால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் (E20 Fuel) நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதுகுறித்த சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்கும் வாகன ஓட்டிகளின் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார்.

we-r-hiring
அமைச்சர் நிதின் கட்கரியின் நேர்காணல் விளக்கம்


நாளிதழ் ஒன்றுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், “உங்களுக்கு E20 எரிபொருள் வேண்டாம் என்றால், நீங்கள் 100% தூய்மையான பெட்ரோலை வாங்கிக் கொள்ளலாம்; ஆனால் அதற்கு நீங்கள் கூடுதல் விலை கொடுக்க வேண்டும்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் தற்போது 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் தடையின்றிக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நுகர்வோருக்குத் தங்களது வாகனங்களில் எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்த விருப்பமில்லை என்றால், அவர்கள் தாராளமாக 100% தூய்மையான பெட்ரோலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், அத்தகைய தூய்மையான பெட்ரோலை வாங்குவதற்கு அவர்கள் சந்தையில் கூடுதல் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.”

“இன்ஜின் பாதிப்பு என்பது பொய் பிரசாரம்” – அமைச்சர் சவால்

E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் இன்ஜின்கள் பாதிக்கப்படுவதாகவும், பாகங்கள் துருப்பிடிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகார்களை அமைச்சர் நிதின் கட்கரி முற்றிலுமாக மறுத்துள்ளார். “எத்தனால் கலப்பு பெட்ரோலால் இன்ஜின் பாதிக்கப்படுகிறது என்ற வாதங்கள் அனைத்தும் திட்டமிட்டுப் பரப்பப்படும் அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய் பிரசாரங்கள் ஆகும். E20 எரிபொருளால் தங்களது வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசிடமோ அல்லது வாகன உற்பத்தி நிறுவனங்களிடமோ இதுவரை நுகர்வோர் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வப் புகாரும் வரவில்லை.

 மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோகார்ப் போன்ற முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்குத் தொடர்ந்து உத்தரவாதம் (Warranty) வழங்கி வருவதோடு, E20 பயன்பாட்டால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பதைத் தங்களது கள ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளன.” என்றார்.
நிதின் கட்கரி

மைலேஜ் குறைவு  

E20 பெட்ரோல் பயன்படுத்தும்போது வாகனங்களின் மைலேஜ் (எரிபொருள் சிக்கனம்) 3 முதல் 5 சதவீதம் வரை குறையக்கூடும் என்பதை அண்மையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகமும் ஒப்புக்கொண்டது.

பெட்ரோலை விட எத்தனாவுக்குக் குறைவான கலோரிஃபிக் மதிப்பு (Calorific Value) இருப்பதே இந்த மைலேஜ் குறைவிற்குக் காரணம் என்றாலும், ஒட்டுமொத்தப் பொருளாதார ரீதியாக இத்திட்டம் இந்தியாவிற்குப் பெரும் நன்மைகளைத் தந்துள்ளது என அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு லாபம்

மேலும் இதுகுறித்து மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், “எத்தனால் கலப்புத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் சுமை பெருமளவு குறைந்துள்ளது. இதன் மூலம் இதுவரை சுமார் ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணி நாட்டுக்குச் சேமிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டிலேயே மக்காச்சோளம் மற்றும் கரும்புச் சக்கைகளில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால், இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் ரூ.1.66 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி இந்திய விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்று சேர்ந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் கார்பன் உமிழ்வு (Carbon Emissions) சுமார் 40% வரை குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பெரும் பங்களிப்பு வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது. 

பல்வேறு எரிபொருள் தேர்வுகள்

பெட்ரோல் நிலையங்களில் நுகர்வோருக்குப் பல்வேறு எத்தனால் கலப்புத் தேர்வுகளை (உதாரணமாக E10, E20) தனித்தனியாக வழங்குவது தற்போதைய உள்கட்டமைப்பு மற்றும் விநியோக முறையில் பெரும் சிக்கலையும் கூடுதல் செலவையும் ஏற்படுத்தும் என்பதால் அது சாத்தியமில்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், வருங்காலத்தில் ஃபிளெக்ஸ்-ஃபுயல் (Flex-Fuel Vehicles) வாகனங்களின் வருகைக்கு ஏற்ப, E20 விடக் குறைந்த விலையில் 85% எத்தனால் கொண்ட E85 எரிபொருள் தேர்வுகளும் சந்தையில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

MUST READ