13 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட முழுவதிலும் இருந்து 1,300 பணியாளர்கள் ஒரே நாளில் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், கூட்டுறவு சேவைகளும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டடன.


13 அம்ச முக்கியக் கோரிக்கைகள்:
தமிழக அரசு தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. அதில் இடம்பெற்ற முக்கியக் கோரிக்கைகள் வருமாறு: நிலுவை ஊதியம் வழங்கல்: 01.04.2023 முதல் பதிவாளரால் அனுமதிக்கப்பட்ட புதிய ஊதியத்தை, அப்போதிருந்தே நிலுவைத் தொகையுடன் (Arrears) பணியாளர்களுக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியப் பயன்கள்: பணியாளர்கள் ஓய்வுபெறும் நாளன்றே அவர்களுக்கான ஓய்வுகால நிதிப் பயன்கள் முழுமையாகவும் தாமதமின்றியும் வழங்கப்பட வேண்டும்.
தாயுமானவர் திட்டச் சிக்கல்கள்: தாயுமானவர் திட்டத்தின்கீழ் விற்பனையாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு நடைமுறைச் சிரமங்களைக் களைய வேண்டும். சொந்த மாவட்டத்திற்கு மாறுதல்: பணியாளர்கள் அனைவரும் தங்களது சொந்த மாவட்டம் அல்லது வசிக்கும் ஊருக்கு அருகில் நிரந்தரமாகப் பணிபுரியும் வகையில் பணிமாறுதல் சூழலை உருவாக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி: பணிக்காலத்தில் மரணமடைந்த, பணி நிரந்தரம் செய்யப்படாத பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
சேவைகள் முடக்கம் – பொதுமக்கள் சிரமம்
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 212 கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் 1,068 நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் என மொத்தம் 1,300 பேர் இன்று ஒரு நாள் மொத்தமாக விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகத் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன், பயிர்க்கடன், பொது வங்கிச் சேவைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளின் ரேஷன் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முழுமையாகப் பாதிக்கப்பட்டன.
ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகப் பணியாளர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டம் குறித்துச் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தொடக்க கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களின் நியாயமான 13 அம்சக் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகக் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் அடுத்தகட்டப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
