மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குரு ஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாகச் சிறுவர், சிறுமிகள் அணிந்திருந்த கிருஷ்ணன் மற்றும் ராதை வேடங்களும், அவர்கள் அரங்கேற்றிய கலைநிகழ்ச்சிகளும் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன.

கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவ-மாணவிகள் பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்டு பள்ளிக்கு வந்திருந்தனர்.
மழலைகள் பலரும் வண்ணமயமான பட்டு உடைகள், மயில் தோகை கிரீடம், கையில் புல்லாங்குழல் ஏந்தி குறும்புக்காரக் கிருஷ்ணர்களாகவும், பாரம்பரியப் பாவாடை சட்டையில் அழகிய ராதைகளாகவும் வலம் வந்தனர்.
விழாவில் பேசிய ஆசிரியர்கள், கிருஷ்ணரின் லீலைகளையும் கீதையின் தத்துவங்களையும் மாணவர்களுக்கு எளிய முறையில் எடுத்துரைத்தனர்.
ராதையின் கோபத்தைத் தணிக்கும் புராண லீலை
கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளின் மேடையில், மழலைகள் நடித்த புராணக் காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
குறிப்பாக, கண்ணனின் குறும்புகளால் கோபம் கொள்ளும் ராதையின் கோபத்தைத் தணிக்க, அவளது காலடியில் அமர்ந்து குறும்புச் சிரிப்புடன் மழலை கிருஷ்ணன் தோப்புக்கரணம் போடும் காட்சி தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.
இந்த அழகான புராண நிகழ்வை மழலைகள் தங்களது மழலை மொழியிலும், வெள்ளந்தியான அபிநயங்களாலும் வெளிப்படுத்திய விதம் காண்போரின் உள்ளங்களைக் கவர்ந்தது.
தொடர்ந்து, கிருஷ்ணரின் புகழைப் பாடும் பக்திப் பாடல்களுக்குச் சிறுவர், சிறுமிகள் உற்சாகமாக மேடையில் நடனமாடினர்.
விழாவில் பங்கேற்ற பெற்றோரும் ஆசிரியர்களும் மழலைகளின் அழகிய நடிப்பைப் பாராட்டி உற்சாகப்படுத்தியதுடன், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் மாணவ-மாணவிகளிடம் பக்தி மற்றும் பண்பாட்டு மரபுகளை வளர்க்கும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்தனர்.
