திருப்பத்தூர் அருகே சிறுவனைச் சுட்டுக் கொன்ற வழக்கிலும் போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி அரவிந்த், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்துச் செல்லும்போது காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரை திசைதிருப்பித் தப்பிய கைதி
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் என்ற விசாரணைக் கைதி, போக்சோ வழக்கின் விசாரணைக்காகச் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்து, மீண்டும் அவரைக் பலத்த பாதுகாப்புடன் மதுரைச் சிறைக்கு அழைத்துச் செல்வதற்காகக் காவல்துறையினர் பேருந்து நிலையப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, பாதுகாவலுக்கு வந்த காவலர்களைத் தந்திரமாக திசைதிருப்பிவிட்டு அரவிந்த் திடீரெனத் தப்பி ஓடினார்.

காவலர்கள் இருவர் அதிரடி சஸ்பெண்ட்
கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் அலட்சியமே முக்கியக் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கைதியின் வழிக்காவலுக்குச் சென்ற ஆயுதப்படை காவலர் மகாராசன் மற்றும் எஸ்.எஸ் கோட்டை காவல் நிலைய பெண் காவலர் ஆனந்தி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தீவிரத் தேடுதல் வேட்டை
தப்பி ஓடிய குண்டர் சட்ட விசாரணைக் கைதி அரவிந்தைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. முக்கியச் சோதனைச் சாவடிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுப் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ‘ஆற்றுப்படுத்துதல் மையம்’ திறப்பு!
