அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகள் இணைந்து நடத்திய உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வரும் வேளையில், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) இந்த வெற்றியைத் தங்களது சொந்த வெற்றியைப் போல உற்சாகமாகக் கொண்டாடி வருவது பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடி ஒற்றுமையும் தவெகவினரின் கொண்டாட்டமும்:
தவெகவினர் இந்த அளவுக்குக் கொண்டாடக் காரணம், ஸ்பெயின் நாட்டின் தேசியக் கொடியும், தவெகவின் கட்சிக் கொடியும் ஒரே மாதிரியான வண்ண அமைப்பைக் கொண்டிருப்பதுதான். நடுவில் மஞ்சள் நிறமும், இரு ஓரங்களிலும் சிவப்பு நிறமும் கொண்டதாக ஸ்பெயின் கொடி அமைந்திருக்கும். தவெக கொடியும் இதே வண்ணங்களைக் கொண்டுள்ளதால், “இதுவே வெல்லும் கொடி” என்று தவெகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருபடி மேலே போய், தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் ஆசி பெற்றதால் தான் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது என்றும், 2026-ஆம் ஆண்டு தவெக-விற்கான வெற்றியாண்டு என்றும் அக்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.
2026 மே 4 முதல் பிஃபா வரை:
கடந்த மே 4-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது பிஃபா உலகக் கோப்பையிலும் அதே வண்ணம் கொண்ட ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனை ஒப்பிட்டு, இரண்டு கொடிகளையும் ஒன்றாக இணைத்து “2026-ல் எங்கு பார்த்தாலும் வெல்லும் கொடி தான்” என தவெகவினர் எக்ஸ் (X) மற்றும் முகநூல் பக்கங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தவெக கொடியின் பின்னணி:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் தவெக கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியபோதே, அது ஸ்பெயின் நாட்டு கொடி போல இருப்பதாக விவாதங்கள் எழுந்தன. தவெக கொடியின் நடுவில் உள்ள மஞ்சள் நிறப் பகுதியில் இரண்டு போர் யானைகளும், வாகை மலரும் இடம்பெற்றிருக்கும்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டவர்கள் என்ற சமத்துவத்தைக் குறிக்க சிவப்பு நிறமும், வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்பதை உணர்த்த மஞ்சள் நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வெற்றியின் குறியீடாக வாகை மலரும், எதிரிகளை வீழ்த்தும் வலிமையின் அடையாளமாகப் போர் யானைகளும் கொடியில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
