1956-இல் அரியலூர் ரயில் விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு. “விபத்துக்கு நான் நேரடியாகக் காரணமில்லை என்றாலும், அந்தத் துறையின் தலைவராகப் பொறுப்பேற்பதே என் கடமை” என்ற அவரது முடிவு, மக்களாட்சியின் தார்மீகப் பொறுப்புக்கூறலுக்குச் சான்றாக அமைந்தது. ஆனால், இன்று நாட்டின் தலைநகரில் பெரும் போராட்டங்கள் வெடித்த பிறகும், அத்தகைய ‘தார்மீகப் பொறுப்புக்கூறல்’ அரசுகளிடம் துளிக்கூடத் தென்படவில்லை.


தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் மாணவர்கள் சார்பில் தீவிரப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் இதில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட நீட் (NEET) உட்பட 152 தேசிய அளவிலான தேர்வுகளிலும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இப்போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் முழு ஆதரவு அளித்துள்ளன.
போராட்டத்தின் வீரியம் மற்றும் மக்கள் எதிர்ப்பை உணர்ந்த மத்திய அரசு ஓரடி இறங்கி வந்து, வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து விசாரிக்கத் தனி சிறப்பு நீதிமன்றம் (Special Court) அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இருப்பினும், முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
முற்காலத்தில் அரசியலில் ‘தார்மீகப் பொறுப்பு’ என்பது முதன்மை நிலையைப் பெற்றிருந்தது. ஆனால், இன்றைய நவீன அரசியலில் ‘குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை எவரும் குற்றவாளி அல்ல’ என்ற சட்டப்பூர்வ வரையறை மட்டுமே முதன்மைப்படுத்தப்படுகிறது. மேலும், இன்றைய 24×7 செய்தி ஊடகச் சூழலில் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்தால், அது எதிர்க்கட்சிகளின் “அரசியல் வெற்றி” ஆகச் சித்தரிக்கப்படும் என்றும், ஆட்சியின் பிம்பம் பாதிக்கப்படும் என்றும் ஆளும்கட்சி கருதுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைத் “தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்” எனக் கூறிப் புறக்கணிக்கும் போக்கே மேலோங்கியுள்ளது.
அமைச்சர்களின் ராஜினாமா என்பது வெறும் தனிநபர் முடிவு மட்டுமல்ல; அது மக்களாட்சி அமைப்பின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஒரு கருவியாகும். சட்டப்பூர்வ சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது ஒருபுறமிருந்தாலும், எதிர்கால சந்ததியினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கவும் அரசியல் அறநெறியும் தார்மீகப் பொறுப்புக்கூறலும் மீட்டெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
