சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் உத்தரப் பிரதேசத்தில் விசித்திரச் சம்பவம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், தங்களுக்குச் சமூக வலைதளங்களுக்காக ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்கள் எடுத்துக் கொடுத்து வந்த இளைஞரை, உடன் பிறந்த மூன்று சகோதரிகள் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரீல்ஸ் காதல் திருமணம்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சரோஜ், சாவித்திரி மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று உடன் பிறந்த சகோதரிகள், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வந்துள்ளனர். இவர்களுக்குக் கேமராமேனாக இருந்து, ரீல்ஸ் வீடியோக்களை நேர்த்தியாகச் படம்பிடித்து, எடிட் செய்து கொடுத்து வந்தவர் விக்கி என்ற இளைஞர். வீடியோ எடுக்கும் இடைவெளியில், அந்த இளைஞருக்கும் மூன்று சகோதரிகளுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், மூன்று பெண்களுமே அந்த ஒரே இளைஞரைக் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரே மேடையில் 3 சகோதரிகள்
யாரையும் பிரிந்து வாழ விருப்பமில்லாத அந்தச் சகோதரிகள், மூவரும் சேர்ந்து ஒரே நபரைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்கு இளைஞர் விக்கியும் சம்மதிக்கவே, அண்மையில் ஒரே மேடையில் மூன்று சகோதரிகளையும் விக்கி மாலையிட்டுத் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவின.
தசரதரைக் சுட்டிக்காட்டி அடுத்த வீடியோ
இந்த விசித்திரத் திருமணம் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அந்த மூவரும் இணைந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறுகையில், “நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ விரும்பவில்லை. அதனால் தான் ஒரே நபரைத் திருமணம் செய்துகொண்டோம். இதைப் பார்த்த பலர் எங்களைக் விமர்சிக்கிறார்கள். இராமாயணத்தில் ஸ்ரீராமரின் தந்தை மன்னர் தசரதனுக்கே மூன்று மனைவிகள் இருக்கும் போது, நாங்கள் செய்ததில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த விசித்திரத் திருமண வீடியோவும், அவர்களின் விளக்கமும் தற்போது இணையவாசிகளிடையே பெரும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
