திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பாடப்படும் பாடல்களின் வரிசை குறித்து ஆளுநர் மாளிகையிலிருந்து (ராஜ்பவன்) கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துணைவேந்தர் சந்திரசேகர், விழா நடைமுறைகள் மற்றும் பாடல்கள் வரிசை குறித்து ராஜ்பவன் அளித்துள்ள வழிகாட்டுதல்களை விவரித்தார்.
ராஜ்பவனின் புதிய உத்தரவு விவரம்
செய்தியாளர்கள் சந்திப்பில் துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்ததாவது, பட்டமளிப்பு விழாவில் பாடல்கள் பாடப்படும் வரிசை தொடர்பாக ராஜ்பவனில் இருந்து ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவு வந்துள்ளது என்றார்.
அதன்படி, விழாவின் தொடக்கத்தில் முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடலும், அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக ‘தேசிய கீதமும்’ பாடப்படும் என்றும், நிறைவாகக் கடைசியில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படும் என்றும் தெரிவித்தார்.
சூடுபிடிக்கும் சர்ச்சையும் கேள்விகளும்
தமிழகத்தில் வழக்கமாக அரசு மற்றும் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்தும்’, நிறைவில் ‘தேசிய கீதமும்’ பாடப்படுவதே நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் வழக்கமான நடைமுறையை மாற்றி, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்குப் பிறகு கடைசியாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என ஆளுநர் மாளிகை பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, கல்வி வட்டாரங்களிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
