சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கல்வி, பாசனம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்துப் பேசி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.


“நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர் குரல்!”
நீட் தேர்வு விவகாரம் குறித்துப் பேசிய அவர், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் அதிமுக தொடக்கம் முதலே உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் நீட் தேர்வுக்கு எதிரான குரல் எழுந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கி சமூகநீதியை நிலைநாட்டினோம். தற்போது இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான உரிமைக் குரலுக்கு மத்திய அரசு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
“காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டமே தீர்வு!”
காவிரி நீர்ச் சிக்கல் குறித்துப் பேசுகையில், “உச்சநீதிமன்றம் மாதந்தோறும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவைத் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை கர்நாடக அரசு மதித்துப் பின்பற்றவில்லை. காவிரி மேலாண்மை ஆணையமும், நீர் ஒழுங்காற்றுக் குழுவும் 53 முறை கூடியும் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. ஜூலை மாதத்திற்கான உரிய நீரும் திறந்து விடப்படாததால், தமிழகம் வறட்சியை நோக்கிச் செல்கிறது. அணைகளும் பாசன ஏரிகளும் வறண்டு வருகின்றன. தமிழக அரசு கர்நாடகாவிற்கு உரிய அழுத்தம் கொடுக்கத் தவறிவிட்டது. கர்நாடக முதல்வரைத் தமிழகப் பிரதிநிதிகள் சந்திப்பதில் தவறு இல்லை என்றாலும், எந்த நோக்கத்தில் சந்திக்கிறார்கள் என்பதைத் தமிழக மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். காவிரி நீரைப் பெற சட்டரீதியான போராட்டமே சரியான தீர்வாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
“தமிழக முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்?”
தமிழக முதல்வர் விஜய் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், “இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடி வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய்யின் நிலைப்பாடு என்ன? மாணவர்களுக்கு ஆதரவாக அவர் ஏன் குரல் கொடுக்கவில்லை? இந்த விவகாரத்தில் அவரது மௌனம் ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
“ரீல்ஸ் அரஸாகச் செயல்படும் தவெக!”
தொடர்ந்து மாநில அரசின் நிர்வாக சீர்கேடுகளை விமர்சித்த அவர், “மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட, சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ தயாரிப்பதில்தான் இந்த தவெக அரசு அதிக கவனம் செலுத்துகிறது. தொழில்முறை இன்ஃப்ளூயன்சர்களைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வதன் மூலம் மட்டும் நிர்வாகத்தை நடத்திவிட முடியாது. பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின்தடை போன்ற அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தவெக அரசு முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது” என்று சாட்டையடி கொடுத்தார்.
“லாக்கப் மரணங்களும் காவல்துறைப் பற்றாக்குறையும்”
லாக்கப் மரணங்கள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், “கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டி நீதி கேட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று தங்களின் ஆட்சியில் நடக்கும் சம்பவங்களுக்கு என்ன நீதி வழங்கியுள்ளனர் என்பதற்குப் பதில் சொல்ல வேண்டும். காவல்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தாமல் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க முடியாது. மாநிலத்தில் போதிய காவலர்கள் இல்லாததால் பல்வேறு பணிச் சுமைகளும் சிரமங்களும் நிலவுகின்றன” எனக் குறிப்பிட்டார்.
நிறைவாக, “தற்போதுள்ள தவெக அரசின் ஆயுட்காலம் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மை இல்லாத ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது” என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்தார்.
