அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தீவிர ராணுவ மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இந்த முடிவு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஐ.நா தூதர் தெரிவித்துள்ளார்.


மோதலும் தீவிரத் தாக்குதல்களும்:
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக மீண்டும் மோதல் தீவிரமடைந்தது. இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் கடும் தாக்குதலைத் தொடங்கியது. இதில் ஈரானின் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா குறிவைத்த நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து 13 இரவுகள் தாக்குதல்:
கடந்த வெள்ளிக்கிழமைக்கு முந்தைய இரவு வரை ஈரான் மீது தொடர்ந்து 13 இரவுகளாக அமெரிக்க ராணுவம் தீவிரத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய போர் கட்டளையகம் தெரிவித்திருந்தது.
தற்காலிகப் போர் நிறுத்தம்:
இந்தச் சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களாக அமெரிக்கா தாக்குதல் எதையும் மேற்கொள்ளவில்லை என ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது அக்ரமினியா உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அமெரிக்காவுக்கான ஐ.நா தூதர் மைக் வால்ட்ஸ் கூறுகையில்,
“அமெரிக்கப் படைகள் முழுத் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்குச் சற்று நேரம் கொடுக்கலாம் என அதிபர் ட்ரம்ப் கருதுகிறார்”
என்று தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை சரிவு:
அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், சர்வதேசச் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்குச் சுமார் 5 டாலர்கள் வரை குறைந்து, தற்போது ஒரு பேரல் 88.03 டாலர்களுக்கு விற்பனையாகிறது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு, மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சரக்குக் கப்பல் போக்குவரத்து வழக்கம் போல் அனுமதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி சற்றே தணியும் எனக் கருதப்படுகிறது.
தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை!
