கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுபாலப்பட்டு கிராமத்தில், உயிரிழந்த கணவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வந்த மனைவியையும் அவரது மகள்களையும் உறவினர்களே தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


10 ஆண்டுகளாகப் பிரிந்த வாழ்ந்த தம்பதி!
புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூமாலை – வைத்தீஸ்வரி தம்பதியினருக்கு பிரியதர்ஷினி, பிருந்தா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாகக் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பூமாலை திடீரென உயிரிழந்துள்ளார். தகவலறிந்த அவரது மனைவியும் மகள்களும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு கணவருக்கு இறுதி மரியாதை செலுத்த அங்கு சென்றுள்ளனர்.

இறுதிச்சடங்கில் மோதலும் தாக்குதலும்!
இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த வைத்தீஸ்வரி மற்றும் அவரது மகள்களை பூமாலையின் உறவினர்கள் அனுமதிக்க மறுத்ததுடன், அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வைத்தீஸ்வரி மற்றும் அவரது மகள்கள் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துயரத்தில் இறுதிச் சடங்கிற்குச் சென்ற குடும்பத்தினரே உறவினர்களால் தாக்கப்பட்டு விரட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
