“புதிய நாடாளுமன்றக் கட்டடமே 900 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகத்திற்கு 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான குற்றச்சாட்டையும் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகத் திட்டம் மற்றும் அதன் திட்ட மதிப்பீடு குறித்து ஆவேசமாகப் பேசினார்.

“தனது வீட்டிற்கு அருகிலேயே கட்ட என்ன அவசியம்?”
அப்போது அவர் கூறுகையில், “அரசு நிர்வாக வசதியைக் காரணியாகக் காட்டாமல், ஆட்சியாளர்கள் தங்களின் வீட்டிற்கு அருகிலேயே புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டத் துடிப்பது ஏன்? இதற்கு என்ன அவசியம் வந்தது? கடலோரப் பகுதியையும் மீனவர் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடமே சுமார் 900 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாநிலத்தின் புதிய தலைமைச் செயலகத்திற்கு 1,200 கோடி ரூபாய் செலவிடப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது ஏதோ ஒரு மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது,” என்று சாடினார்.
மக்களின் வரிப்பணம் விரயம்
மேலும் பேசிய அவர், மக்கள் நலத்திட்டங்களுக்கும் அடிப்படைப் பணிகளுக்கும் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறிவரும் நிலையில், இதுபோன்று தேவையில்லாத திட்டங்களுக்குச் பல நூறு கோடிகளைச் செலவிடுவது மக்களின் வரிப்பணத்தைக் சூறையாடும் செயல் என்றும், தமிழக அரசு உடனடியாக இந்தத் திட்டத்தின் செலவு மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நயினார் நாகேந்திரனின் இந்தத் திடீர் குற்றச்சாட்டு, புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு?
