Homeசெய்திகள்திமுகவின் தவறுகளுக்கு கள்ள மவுனம்... தவெக அரசு மீது பாய்ச்சல்: சிபிஐஎம் சண்முகத்தின் சந்தர்ப்பவாத அரசியல்!

திமுகவின் தவறுகளுக்கு கள்ள மவுனம்… தவெக அரசு மீது பாய்ச்சல்: சிபிஐஎம் சண்முகத்தின் சந்தர்ப்பவாத அரசியல்!

-

- Advertisement -

இடதுசாரி அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையிலான சுற்றறிக்கை விவகாரத்தில், தவெக அரசு அதனை உடனடியாகத் திரும்பப் பெற்று, உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் மன்னிப்பும் கோரிய பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை கோரி வீதிக்கு வந்திருப்பது அப்பட்டமான அரசியல் நாடகமாகும்.

we-r-hiring

கடந்த காலங்களில் திமுக அரசு செய்த எண்ணற்ற மக்கள் விரோத அத்துமீறல்களுக்கெல்லாம் வாய்மூடி மவுனியாக இருந்தவர்கள், தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே திடீர் வீரம் காட்டுவது பொதுமக்களிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

தலைமைச் செயலாளரை நீக்கச் சொல்லும் சண்முகம்…

குஜிலியம்பாறை வட்டாட்சியர், இடதுசாரி உறுப்பினர்களின் விவரங்களைக் கேட்டார் என்பதற்காகவும், போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்ற ஒரு சுற்றறிக்கைக்காகவும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் சிபிஐஎம், தலைமைச் செயலாளர் சாய்குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும், முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆவேசமாகக் கடிதம் எழுதுகிறது.

தவறு நடந்ததை உணர்ந்து சுற்றறிக்கையை ரத்து செய்து, வட்டாட்சியர் மீது 17 A-யின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்ட பிறகும், “நாங்கள் மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை, தலைமைச் செயலாளரின் தலையை எடுக்கச் சொல்கிறோம்” என எகிறும் சண்முகத்தின் இந்த ‘காம்ரேட் வீரம்’ கடந்த கால திமுக ஆட்சியில் எங்கு அடகு வைக்கப்பட்டிருந்தது?

கள்ளச்சாராய மரணங்களும்… லாக்-அப் படுகொலைகளும்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்ட ஏழை எளிய உழைக்கும் மக்கள் துடிதுடித்து இறந்தார்களே, இந்தச் சண்முகம் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கம் கேட்டாரா? உளவுத்துறையும், காவல்துறையும் முழுமையாகத் தோல்வியடைந்ததால் நிகழந்த அந்தப் படுகொலைகளுக்காக, அப்போதைய தலைமைச் செயலாளரையோ அல்லது டிஜிபி-யையோ பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சிபிஐஎம் வீதியில் இறங்கிப் போராடியதா?

விக்னேஷ் மரணம் உள்ளிட்ட தொடர்ச்சியான காவல் நிலைய லாக்-அப் மரணங்கள் (Lock-up Deaths) நிகழ்ந்தபோதும், அரசை விமர்சித்த பத்திரிகையாளர்கள், சமூக ஊடகர்கள், சாமானியர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் காலில் போட்டு மிதித்துக் கைது செய்தபோதும் இதே கம்யூனிஸ்ட் தலைவர்கள் எந்தப் பொந்தில் பதுங்கியிருந்தார்கள்?

பட்டியலின மக்கள் மீதான வன்முறை!

பட்டியலின மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட வேங்கைவயல் கொடூரம் நடந்து பல மாதங்களாகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காத திமுக அரசை எதிர்த்துச் சண்முகம் ஒருநாளாவது ஆவேச அறிக்கை விட்டாரா? ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்ட போதும், அவர்கள் மீது சாதிய வன்முறைகள் ஏவப்பட்ட போதும் வர்க்கப் புரட்சி பேசிய இந்தத் தலைவர்களின் நாக்கு ஏன் நகரவில்லை?

அன்னூர் மற்றும் மேல்மா சிப்காட் திட்டங்களுக்கு எதிராக அமைதியான வழியில் தங்கள் நிலங்களைக் காக்கப் போராடிய அப்பாவி விவசாயிகள் மீது கொடூரமான ‘குண்டர் சட்டம்’ பாய்ந்ததே; அப்போது விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிபிஐஎம் தலைவர்கள் ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு அமைதி காத்தது ஏன்?

தூய்மைப் பணியாளர்கள் உழைக்கும் வர்க்கம் இல்லையா?

சிஐடியு (CITU) அமைப்பைச் சேர்ந்த சாம்சங் ஆலைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடியபோது, நள்ளிரவில் காவல்துறையை ஏவி தொழிலாளர்களைக் கைது செய்து, போராட்டப் பந்தலைச் சூறையாடியதே திமுக அரசு; அப்போது காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதே சண்முகம் முதல்வர் வாசலில் நின்று சவால் விட்டாரா?

தங்களின் அடிப்படை உரிமைக்காகப் போராடிய மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை, குப்பைகளை அள்ளுவது போலக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் வீசியெறிந்து கைது அவலம் நடந்ததே, அப்போது உழைக்கும் வர்க்கத்தின் காவலர்கள் என மார்தட்டிக்கொண்ட இடதுசாரிகள் வாய் திறக்காதது ஏன்? இந்த அவலம் நடக்கும்போது, ஸ்டாலின் ‘கூலி’ திரைப்படத்தை பார்த்து குதூகலித்துக்கொண்டிருந்தாரே, அதைக் கேட்க தைரியமில்லாமல் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருந்தவர்தானே சண்முகம்.

பள்ளிக்கரணை முதல் கக்கூஸ் ஊழல் வரை…!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் (Pallikaranai Marshland) விதிகளுக்குப் புறம்பாகப் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டபோதும், தமிழ்நாடு முழுவதும் ஆறுகளிலும் மலைகளிலும் அப்பட்டமாக மணல் கொள்ளையும், கனிம வளக் கொள்ளையும் தலைவிரித்தாடியபோதும் இந்தச் செங்கொடி இயக்கத் தலைவர்கள் இயற்கைக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா?

சென்னை மாநகராட்சியில் கழிப்பறைகள் பராமரிப்பு என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பொதுப்பணம் ‘கக்கூஸ் ஊழல்’ மூலம் சூறையாடப்பட்டதே; அப்போது மாநகராட்சி அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ பதவி நீக்கம் செய்யக் கோரி சண்முகம் பேனா பிடித்தாரா?

ரூ.25 கோடி தேர்தல் நிதியும்… போலி கம்யூனிச முகமூடியும்!

திமுக ஆட்சியில் நடந்த இத்தனை மக்கள் விரோதக் கொடூரங்களையும், ஊழல்களையும், அத்துமீறல்களையும் கண்டும் காணாமல் கண்களை மூடிக்கொண்டதற்கு, தேர்தலின் போது திமுகவிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் அந்த ரூ.25 கோடி தேர்தல் நிதிதான் காரணமா? கூட்டணியில் ஒட்டிக்கொண்டு மக்கள் துயரங்களை மறந்தவர்கள், இப்போது புதிதாக வந்துள்ள தவெக அரசை மட்டும் குறிவைத்து மிரட்டிப் பார்க்க நினைப்பது எந்த வகை நியாயம்? பெ. சண்முகத்தை பின்னணியில் இருந்து இயக்குவது யார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறதே…!

அதிகாரிகளின் தவறுகளைத் தட்டிக்கேட்பதோ, அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதோ ஜனநாயக உரிமைதான். ஆனால், திமுக அரசு செய்தால் 60 உயிர்கள் போனாலும் கள்ள மவுனம் சாதிப்பதும்; மாற்று அரசு வந்தால் சுற்றறிக்கைக்குக் கூட வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதும் சந்தர்ப்பவாத அரசியலின் உச்சகட்டம்.

உழைக்கும் மக்களின் பெயரால் பிழைப்பு நடத்தும் சிபிஐஎம் தலைவர்கள், தங்களின் இந்தப் போலித்தனமான இரட்டை வேட அரசியலை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, குறைந்தபட்ச மனசாட்சியோடு நடந்துகொள்வது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.

MUST READ