மாணவர்களுக்கு அரசியலும் போராட்டமும் தேவையில்லை என்ற பழமைவாதப் கருத்துருவாக்கம் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே முறியடிக்கப்பட்டுவிட்டதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சுட்டிக்கட்டியுள்ளார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மாணவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும் தீரமிக்க பங்களிப்புமே போராட்டத்திற்கு வலு சேர்த்தன என்பதை வரலாறு உணர்த்துகிறது.


ஆனால், தற்போதைய சூழலில் மாணவர்களின் பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையைச் சீர்குலைக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் போன்ற கல்வி முறை மாற்றங்கள் திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் மற்றும் ஆணி பொறுத்திய லத்திகள் பயன்படுத்தப்பட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களைத் தாக்க உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இதுவரை முறையான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை என்றும், இதுதொடர்பான நாடாளுமன்ற விவாதங்கள் கவனம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தின் முடிவுகளும், அரசியல் பிரமுகர்களின் சமூக வலைதளப் பதிவுகளும் ஒரே திசையில் மாணவர்களையும் இடதுசாரி அமைப்புகளையும் குற்றம் சாட்டும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மாணவர் இயக்கங்களை முடக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மனப்பான்மை கொண்ட வகுப்பறைகளை மாட்டு மூத்திரத்தின் மேன்மையை விளக்கும் மேடையாக மாற்றும் முயற்சிகளை மாணவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும், சங்கங்களாக இணைந்து செயல்படும் மாணவர்களின் உரிமைகளை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் சு.வெங்கடேசன் எம்.பி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
“காரும் இல்ல, வேலையும் இல்லனு பச்சைப் பொய்!” – சட்டப்பேரவையில் சிக்கிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன்!
