வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று எஃப்.எம்.ஜி. (FMGE) தேர்வில் தேர்ச்சி பெற்றும், ஒன்றிய அரசின் மருத்துவமனைகளில் பயிற்சி பெற அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.


போராட்டக் காரணங்களும், குற்றச்சாட்டுகளும்
போராட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் மருத்துவர் சரண் கூறியதாவது: “கடந்த ஆட்சியில் நீண்ட போராடி 750 மருத்துவப் பயிற்சி இடங்களைப் பெற்றோம். ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் பயிற்சி பெற மாநில மருத்துவத்துறை தரப்பில் ஆணை வழங்கப்பட்ட போதிலும், அந்த மருத்துவமனைகளில் உரிய தகவல்கள் தெரிவிக்கப்படாததால் எங்களுக்குப் பயிற்சி வழங்க அனுமதி மறுக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் முறையிட்டபோது, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்பதற்காகக் கூறி மாணவர்களிடம் ‘உத்தரவாதக் கடிதம்’ (Undertaking Form) கட்டாயப்படுத்திப் பெறப்படுகிறது. வழங்கப்பட்ட இடங்களை நாங்கள் ஏற்காவிட்டால் மூப்பு நிலை (Seniority) மாறிவிடும்; அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதுநிலை நீட் தேர்விலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும். எனவே அரசு உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராடிப் பெற்ற 750 இடங்களில், மத்திய அரசின் மருத்துவமனைகளுக்குச் சுகாதாரத்துறை சார்பில் முறையாக மின்னஞ்சல் அனுப்பப்படாத காரணத்தினால் தற்போது 100 இடங்கள் பறிபோய்விட்டன.”
அமைச்சரின் உதவியாளர் மீது புகார்
மேலும் அவர் பேசுகையில், “இதுகுறித்து அமைச்சரைச் சந்தித்தபோது, அவர் எங்களிடம் மரியாதையாகப் பேசினார்; மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தனது உதவியாளரிடம் தெரிவித்தார். ஆனால், அமைச்சரின் சிறப்பு தனி உதவியாளர் எங்களிடம் மிகவும் ஒருவித திமிர்த்தனமாக, ‘உங்களுக்கு 1,000 இடங்கள் தந்ததே பெரிய விஷயம், இதில் வேறு கேள்வி கேட்பீர்களா?’ என்று மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார். குறைந்தபட்சம் மனிதனாகக் கூட மதிப்பளிக்காத இத்தகைய போக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.”
மாணவர்களின் கோரிக்கைகள்
“ஏற்கனவே மருத்துவர்களுக்குப் பயிற்சி பெற ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளில், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மீண்டும் இடங்களை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். எங்களிடம் வாய்மொழியாக எந்த உத்தரவாதம் அளித்தாலும், அது தொடர்பாகவும் மருத்துவத்துறை தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாக அரசாணை அல்லது கடிதம் வழங்க வேண்டும்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
மின் கட்டணக் உயர்வை நியாயப்படுத்திய அமைச்சர் நிர்மல் குமார்!
