“ஐந்தாண்டுகளில் ஐந்து கட்சிகளுக்கு மாறியவர்தான் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.


நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழக அரசு மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“அரசியல் அனுபவமே இல்லாத முதல்வர் ஜோசப் விஜய்!”
கூட்டத்தில் உரையாற்றிய ஆர்.பி. உதயகுமார், “கொத்தனார் வேலைக்குச் செல்வதற்குக்கூட முன் அனுபவம் கேட்கிறார்கள். ஆனால், 8 கோடி மக்கள் வாழும் தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை எந்தவித அரசியல் பயிற்சியும் இல்லாத ஜோசப் விஜய்யிடம் மக்கள் தூக்கிக் கொடுத்துவிட்டார்கள். இது நிஜமல்ல, ஒரு மாயை என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற நதிகளின் உரிமைகளுக்காக இவர்கள் எப்போதாவது போராடியது உண்டா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “மாலை 6 மணிக்கு மேல் முதலமைச்சரை யாராலும் சந்திக்க முடியாது என்றால், அது நம் தமிழக முதல்வர் ஜோசப் மட்டும்தான். முதலமைச்சர் விஜய் போல் நடிக்கத் தெரியாததால்தான் நாம் ஆட்சியை இழந்தோம். மேகதாதுவில் அணை கட்ட முயற்சி நடக்கும்போது, காவிரியில் வறண்ட நிலத்தைப் போய் பார்க்காமல் முதல்வர் வேறு எங்கோ ஆய்வு செய்கிறார்” என்று சாடினார்.
தவெக குதிரைப்பேரம் மற்றும் அதிமுகவிலிருந்த சென்றவர்கள் மீது சாடல்
தவெக கட்சி குறித்துப் பேசிய அவர், “ஆட்சி அமைக்கப் பெரும்பான்மையை நிரூபிக்கத் தமிழக வெற்றிக் கழகத்தினர் சோபா தருவோம், அமைச்சர் பதவி தருவோம் என்றெல்லாம் கூறி குதிரைப்பேரம் நடத்தினார்கள். இதன்மூலம் பதவி வெறி பிடித்தவர்தான் ஜோசப் விஜய் என்பதை என்னால் கூற முடியும்” என்றார்.
அதிமுகவிலிருந்து தவெகவிற்குச் சென்றவர்கள் குறித்து எச்சரித்த அவர், “அதிமுகவிலிருந்து சென்றவர்களைத் தொண்டர்கள் சாபம் விட்டால் சாம்பலாகிப் போய்விடுவீர்கள். சாமானிய தொண்டர்களை நம்பித்தான் அதிமுக இருக்கிறது, ஓடுகாளிகளை நம்பி இல்லை. அதேசமயம் திமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளைப் போல தவெகவிற்கும் நமது சார்பில் ஒரு 5 பேரைப் பயிற்சி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறோம்” என்று பரபரப்பாகப் பேசினார்.
அமைச்சர் நிர்மல் குமார் மீதான விமர்சனம்
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் குறித்துப் பேசிய உதயகுமார், “நிர்மல் குமார் மதுரைக்காரர், உசிலம்பட்டி தம்பிதான். ஆனால், ஐந்தாண்டுகளில் 5 கட்சிகளுக்குச் சென்ற அமாவாசைதான் அவர். அப்படிப்பட்டவர் பேசுவதையெல்லாம் நாம் கேட்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என்று விமர்சித்தார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக முதல்வர் தங்கள் மாநிலத்திற்கு வர வேண்டாம் என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், “இதைவிட ஒரு தலைகுனிவு தமிழகத்திற்கு ஏற்பட வேண்டுமா?” என்று ஆதங்கத்துடன் கூறி உரையை முடித்தார்.
