அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் கொலை முயற்சிகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை அவரது மைதானம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது தொடர்ச்சியாக கொலை முயற்சித் தாக்குதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியலையும் புரட்டிப் போட்டது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு டிரம்பிற்கு ஆதரவு பெருகிய நிலையில், குடியரசு கட்சி சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், கலிபோர்னியாவில் உள்ள ரான்சோ பாலொஸ் வெர்டெஸ் (Rancho Palos Verdes) பகுதியில் அமைந்துள்ள டிரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப் (Trump National Golf Club) அருகே அமைந்துள்ள மைதானத்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் யார்?
கலிபோர்னியா கோல்ஃப் மைதானத்தைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டு, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த ஜூனின் ஜான் டேலே (38) என்ற நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய சோதனையில் திடுக்கிடும் தகவல்கள்
கைது செய்யப்பட்ட ஜூனின் ஜான் டேலேவின் காரில் முழுமையாக லோட் செய்யப்பட்ட குண்டுகள் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அவரது பாக்கெட்டில் தனியாக 16 தோட்டாக்கள் இருந்ததாகவும், அவரிடம் அனுமதியின்றி ஷாட்கன் (Shotgun) போன்ற ஆயுதங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் பல துப்பாக்கிகள், தோட்டாக்கள், கவச உடைகள் மற்றும் கொடூரமான கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முந்தைய சம்பவங்களின் பின்னணி
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள ஜூனின் ஜான் டேலே மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும், தற்போதைய சம்பவத்தால் சட்டம் ஒழுங்குக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு புளோரிடாவில் உள்ள டிரம்பின் கோல்ஃப் கிளப்பிற்குள் அவரை கொல்லும் நோக்கத்துடன் ஆயுதம் ஏந்தி நுழைந்த நபர் சரியான நேரத்தில் கைது செய்யப்பட்டு பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தற்போது மீண்டும் அதே போன்றதொரு சூழல் ஏற்பட்டுள்ளது டிரம்ப் தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக டிரம்ப்பிற்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது! அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி குற்றச்சாட்டு!
